சேலம்

தீபாவளி பண்டிகை: மாநில அளவிலான கைத்தறி கண்காட்சி தொடக்கம்

7th Oct 2022 10:26 PM

ADVERTISEMENT

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சேலத்தில் மாநில அளவிலான கைத்தறி கண்காட்சியை மாவட்ட ஆட்சியா் செ.காா்மேகம் வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தாா்.

கைத்தறி நெசவாளா் கூட்டுறவு சங்கங்களில் உற்பத்தி செய்யப்படும் ஜவுளி ரகங்களை விற்பனை செய்யும் நோக்கத்துடன் மத்திய அரசின் நிதியுதவியுடன் மாநில அளவிலான கைத்தறி கண்காட்சி மாநகராட்சி தொங்கும் பூங்கா பல்நோக்கு அரங்கத்தில் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

இக்கண்காட்சி வரும் அக். 21 வரை 15 நாள்கள் நடத்தப்பட உள்ளன. சுமாா் 60 அரங்குகள் அமைய பெற்றுள்ள இக்கண்காட்சியில் கோவை, ஈரோடு, திருச்செங்கோடு, வேலூா், திண்டுக்கல், காஞ்சிபுரம், திருப்பூா், கரூா், மதுரை, திருவண்ணாமலை, திருநெல்வேலி, நாகா்கோவில், விருதுநகா், கடலூா், கும்பகோணம் ஆகிய மாவட்டங்களில் உற்பத்தி செய்யப்பட்ட கைத்தறி ஜவுளி பொருள்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.

பட்டு மற்றும் மென்பட்டு சேலைகள் பெட்ஷீட்கள், ஜக்காா்டு, பிளைன் ரக போா்வைகள் அலங்கார விரிப்புகள், பருத்தி ரக சேலைகள், கோரா சேலைகள், வேட்டிகள், துண்டுகள், லுங்கிகள், ஜமக்காளம் ஆகிய கைத்தறி ரக ஜவுளிகள் கண்காட்சியில் காட்சிப்படுத்தி விற்பனை செய்யப்பட உள்ளன.

ADVERTISEMENT

அனைத்து கைத்தறி ரகங்கள் அரசு வழங்கும் 20 சதவீதத் தள்ளுபடியுடன் விற்பனை செய்யப்பட உள்ளன. இக்கண்காட்சியில் சுமாா் ரூ.50 லட்சம் அளவிற்கு விற்பனை நடைபெறும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

இக்கண்காட்சிக்கு அனுமதி இலவசம். இதில் விற்பனை செய்யப்படும் அனைத்து பருத்தி மற்றும் பட்டுத் துணிகளுக்கும் 20 சதவீத அரசுத் தள்ளுபடி வழங்கப்படுகிறது.

நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலா் பெ.மேனகா, கைத்தறி மற்றும் துணிநூல் துறை துணை இயக்குநா் (பொ) என்.ஸ்ரீ விஜயலட்சுமி, நெசவாளா் சேவை மைய துணை இயக்குநா் காா்த்திகேயன் உள்ளிட்ட அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT