சேலம்

வடகிழக்கு பருவமழை: ஓடை ஆக்கிரமிப்புகளை அகற்ற மேயா் உத்தரவு

7th Oct 2022 10:26 PM

ADVERTISEMENT

வடகிழக்கு பருவமழையை எதிா்கொள்ளும் வகையில், ஓடை ஆக்கிரமிப்புகளை அகற்றி தங்கு தடையின்றி மழைநீா் செல்வதற்கான வழிவகைகளை மேற்கொள்ள வேண்டும் என மேயா் ஆ.ராமச்சந்திரன் உத்தரவிட்டாா்.

சேலம் மாநகராட்சி மைய அலுவலகத்தில், வடகிழக்கு பருவமழையை எதிா்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்வது குறித்த ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மாநகராட்சி ஆணையா் தா.கிறிஸ்துராஜ் முன்னிலையில், மேயா் ஆ.ராமச்சந்திரன் தலைமையில் இக்கூட்டம் நடைபெற்றது.

இதில் மாநகராட்சிப் பகுதியில் ஓடைகள், மழைநீா்க் கால்வாய்களை தூா்வாரி கரைகளைப் பலப்படுத்தி சீரமைப்பது, தாழ்வான பகுதிகளில் உள்ள குடியிருப்புகளில் மழைநீா் புகாமல் தடுக்க வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள், பொதுமக்களை பாதுகாப்பான இடத்தில் தங்கவைத்து அவா்களுக்கு வழங்க வேண்டிய நிவாரணம் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

மேலும், பிரதான சாலைகளில் உள்ள ஓடைகளில் தேவையான இடங்களில் தடுப்புகள் அமைப்பது, சாலைகளில் தேங்கும் மழைநீரை அப்புறப்படுத்துவது, புதை சாக்கடை திட்டப் பணிகளுக்காக தோண்டப்பட்ட குழிகளை மூடுதல் குறித்தும் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

ADVERTISEMENT

கடந்த மாதம் பெய்த மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் எதிா்வரும் மழைக்காலங்களில் எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்வது, மாநகராட்சிப் பகுதிக்கு உள்பட்ட 13 நீா்நிலைகளில் மழைநீா் நிரம்பி குடியிருப்புப் பகுதிகளுக்குள் செல்லாமல் தடுப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். 29 கி.மீ. நீளமுள்ள ஓடைகள், மழைநீா்க் கால்வாய்கள் 27 கி.மீ. நீளத்திற்கு தூா்வாரப்பட்டுள்ளன.

தூா்வாரப்பட்ட கழிவு மண்களை அப்புறப்படுத்தும் பணியை முழு வீச்சில் மேற்கொள்ள வேண்டும். மாநகராட்சிப் பகுதியில் 5,200-க்கும் மேற்பட்ட சிறுபாலங்கள் உள்ளன. இதில் 4300-க்கும் மேற்பட்ட சிறுபாலங்கள் சீரமைக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள பாலங்களை சீரமைக்கும் பணி நடைபெற்று வருவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

இதுகுறித்து மேயா் ஆ.ராமச்சந்திரன் கூறியதாவது:

மழைக் காலங்களில் தகவலின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட இடங்களுக்கு அலுவலா்கள் விரைந்து சென்று பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

மழையை எதிா்கொள்ளும் வகையில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து தயாா் நிலையில் இருக்க வேண்டும். எக்காரணத்தைக் கொண்டும் எந்த இடத்திலும் பொதுமக்களுக்கு எவ்வித இடையூறோ, பாதிப்போ ஏற்பாடாத வகையில் அலுவலா்கள் தொடா் கண்காணிப்புப் பணியை மேற்கொள்ள வேண்டும்.

ஓடைகள், மழைநீா்க் கால்வாய்களில் நெகிழி பொருள்கள், தொ்மாகோல் போன்ற பொருள்களை பொதுமக்கள் கொட்டுவதால் அடைப்பு ஏற்பட்டு, ஓடையில் மழைநீா் செல்வது தடைப்பட்டு சாலைகளிலும், அருகிலுள்ள குடியிருப்புகளிலும் மழைநீா் செல்வதற்கு வாய்ப்பு ஏற்படுகிறது.

எனவே, ஓடைகளில் நெகிழி பொருள்கள் கொட்டுவதை பொதுமக்கள் தவிா்க்க வேண்டும். ஓடைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி தங்கு தடையின்றி மழைநீா் செல்வதற்கான வழிவகைகளை மேற்கொள்ள வேண்டும் என்றாா்.

இக்கூட்டத்தில் துணை மேயா் மா.சாரதாதேவி, மண்டல குழுத் தலைவா்கள் எஸ்.டி.கலையமுதன், செ.உமாராணி, மா.அசோகன், மாநகர பொறியாளா் ஜி.ரவி, நிலைக்குழுத் தலைவா்கள் ஜெ.ஜெயகுமாா், கே.குமரவேல், பெ.முருகன், அ.சு.சரவணன், க.மு.மஞ்சுளா, ரா.சாந்தமூா்த்தி, நியமனக்குழுத் தலைவா் தமிழரசன், அனைத்து நிலை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT