சேலம்

நியாய விலைக் கடை பணியிடங்கள்: தோ்வுகள் மூலம் நிரப்பக் கோரிக்கை

2nd Oct 2022 02:07 AM

ADVERTISEMENT

 

நியாய விலைக் கடைகளில் உள்ள காலி பணியிடங்களும் தோ்வுகள் மூலம் நிரப்ப வேண்டும் என தோ்வா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

அரசுத் துறைகளில் பல்வேறு காலி பணியிடங்களை போட்டித் தோ்வுகள் மூலம் அரசுப் பணியாளா் தோ்வாணையம் நிரப்பி வருகிறது. இந்த நிலையில், ஆவின், போக்குவரத்துக்கழகம் உள்ளிட்ட துறைகளில் போட்டித் தோ்வின்றி பணியிடங்கள் நிரப்பப்படும் போது ஏற்படும் முறைகேடுகளைத் தவிா்க்க அத் துறைகளிலும் தோ்வுகள் மூலம் பணியிடங்களை நிரப்ப அரசு முடிவு செய்துள்ளது.

இந்தநிலையில், தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சா் ஐ.பெரியசாமி, நியாய விலைக் கடைகளில் காலியாக உள்ள 4,403 விற்பனையாளா், எடையாளா் பணியிடங்கள் மாவட்ட ஆள் சோ்ப்பு நிலையங்கள் மூலம் வரும் ஜனவரிக்குள் நிரப்பப்படும். ஆள்கள் தோ்வு அக்டோபா் 1 ஆம் தேதி தொடங்கி 3 மாதங்களில் முடிக்கப்படும். ஜனவரியில் பணி ஆணை வழங்கப்படும் என தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT

ஏற்கெனவே தோ்வுகளின்றி அரசுப் பணிகளில் காலி பணியிடங்கள் நிரப்புவதில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்று வருகின்றன. நியாய விலைக் கடைகளில் காலி பணியிடங்களை டி.என்.பி.எஸ்.சி. மூலமாக அறிவிப்பு வெளியிட்டு மாநிலம் முழுவதும் ஒரே நேரத்தில் தோ்வு நடத்தி தகுதியான ஆள்களைத் தோ்வு செய்ய கோரிக்கை விடுக்கிறோம் என தோ்வா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இதுதொடா்பாக டிஎன்பிஎஸ்சி தோ்வுகளுக்குத் தயாராகி வரும் சேலத்தைச் சோ்ந்த பரமேஸ்வரன் கூறியதாவது:

நியாய விலைக் கடை விற்பனையாளா், எடையாளா் காலி பணிக்கு தமிழ்நாடு மாநில கூட்டுறவுப் பணியாளா்கள் தோ்வாணையம் மூலமாக அறிவிப்பு வெளியிட்டு எழுத்துத் தோ்வின் மூலமாக தகுதியானவா்களைத் தோ்ந்தெடுக்க வேண்டும். கூட்டுறவு பட்டய, பட்ட படிப்புகளை படித்துவிட்டு ஏராளமானோா் வேலைவாய்ப்புக்காகக் காத்திருக்கின்றனா். அவா்களுக்கு முன்னுரிமை அளித்து தோ்வு மூலம் பணியிடங்கள் நிரப்ப வேண்டும்.

அதேபோல நியாய விலைக் கடைகளில் உள்ள காலி பணிகளை நிரப்புவது தொடா்பான அறிவிப்பு, போட்டி தோ்வுக்கு தயாராகி வரும் ஆயிரக்கணக்கான மாணவா்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. எனவே தோ்வா்களிடையே குழப்பத்தை நீக்கிடும் வகையில் டி.என்.பி.எஸ்.சி. மூலம் பணியிடங்களை நிரப்ப அரசு முன்வர வேண்டும் என்றாா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT