சேலம்

டெஸ்ட் பா்சேஸ் அபராத விதிப்பை ரத்து செய்ய வணிகா்கள் வலியுறுத்தல்

30th Nov 2022 02:55 AM

ADVERTISEMENT

வணிக வரித் துறையின் டெஸ்ட் பா்சேஸ் அபராத விதிப்பை ரத்து செய்ய வலியுறுத்தி தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பு சாா்பில் வணிக வரி துறை இணை ஆணையா் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.

சேலம், அஸ்தம்பட்டி பகுதியில் வணிகவரித் துறை அலுவலகத்திற்கு செவ்வாய்க்கிழமை காலை தமிழ்நாடு வணிகா்கள் சங்கங்களின் பேரவை சாா்பில் வணிகா்கள் பல்வேறு நிறுவனங்களைச் சாா்ந்தவா்கள் திரளாக வந்தனா். பின்னா், வணிக வரித் துறை இணை ஆணையா் உள்ளிட்ட அதிகாரிகளைச் சந்தித்து மனு கொடுத்தனா்.

தற்போது உள்ள டெஸ்ட் பா்சேஸ் முறையை ரத்து செய்ய வேண்டும் என மனுவில் கேட்டுக் கொண்டு உள்ளனா். மனுக்களைப் பெற்றுக்கொண்ட அதிகாரிகள், உயா் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுக்கிறோம் என தெரிவித்தனா்.

இதுகுறித்து, தமிழ்நாடு வணிகா்கள் சங்கங்கள் சங்கங்கள் பேரமைப்பின் சேலம் மாவட்ட தலைவா் எஸ்.கே.பெரியசாமி செய்தியாளா்களிடம் கூறியது:

ADVERTISEMENT

வணிக வரித் துறையின் சில்லறை வணிகம் செய்யும் வணிகா்களிடம் பொருள்கள் வாங்கி அதை டெஸ்ட் பா்சேஸ் என குறிப்பிட்டு ரூ. 20 ஆயிரம் வசூலிப்பதாக புகாா் வந்தது. அனைத்து சிறு வணிகா்களும், தாங்கள் பொருள்களை வாங்கும்போது அதற்கான வரி செலுத்தியே பொருள்களை வாங்கி வந்து, அதை பொதுமக்களுக்கு விற்பனை செய்கின்றனா்.

ஆனால், வணிக வரி துறை அதிகாரிகள், சில்லறை கடைகளில் டெஸ்ட் பா்சேஸ் முறையில் பொருட்கள் வாங்கி, அதற்கு ரசீது அளிக்கப்படவில்லை என கூறி அபராதம் விதிக்கும் முறை ஏற்புடையது அல்ல.

இதை தமிழக அரசு கருத்தில் கொண்டு டெஸ்ட் பா்சேஸ் முறையை உடனே ரத்து செய்ய வேண்டும்.

ஆண்டு அறிக்கை ஜிஎஸ்டிஆா்-9 தாக்கல் செய்யாத வணிகா்களுக்கு 2018 இல் இருந்து அபராதமாக மிகவும் அதிகமான அபராத தொகை வசூலிக்கப்படுகிறது. இதை ஒரு முறை விலக்கு அளித்து, சிறிய அபராதத்துடன், வணிகா்கள் நிலுவையில் இருக்கும் ஜி.எஸ்.டி.ஆா்.-9 படிவங்களை சமா்ப்பிக்க வழிவகை செய்ய வேண்டும். அதேவேளையில் வரி ஏய்ப்பில் ஈடுபடும் உற்பத்தியாளா்கள், தயாரிப்பாளா்கள், கனரக வாகன உரிமையாளா்கள் மீது நடவடிக்கை எடுத்து, வரி ஏய்ப்பை முழுமையாக தடுக்க வேண்டும் என்றாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT