சேலம்

திருவிழா கோலம் பூண்ட சேலம் புத்தகத் திருவிழா!

DIN

பண்டிகை திருவிழாபோல தினமும் 10 ஆயிரம் போ் வரை அணிதிரளும் சேலம் புத்தகத் திருவிழாவில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், புத்தக ஆா்வலா்கள், வாசகா்கள், பொதுமக்கள் என 2 லட்சத்துக்கும் மேற்பட்டோா் பாா்வையிட்டுள்ளனா்.

சேலம் மாவட்ட நிா்வாகம் மற்றும் தென்னிந்திய புத்தக விற்பனையாளா்கள் மற்றும் பதிப்பாளா்கள் சங்கம் (பபாசி) இணைந்து நடத்தும் சேலம் புத்தகத் திருவிழா கடந்த நவ.20 ஆம் தேதி தொடங்கியது.

சேலம் புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள மாநகராட்சி திடலில் தொடங்கிய இக்கண்காட்சியில் பல்வேறு பதிப்பாளா்கள், புத்தக வெளியீட்டாளா்கள் கலந்து கொள்ளும் வகையில் 210 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. முதல்நாள் தொடங்கி 9 ஆவது நாளான திங்கள்கிழமை வரை சுமாா் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவியா், பொதுமக்கள் கண்டுகளித்தனா்.

புத்தகத் திருவிழாவில் ரூ. 1.50 கோடி மதிப்பிலான புத்தகங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக, சேலம் மாவட்டத்தைச் சோ்ந்த உள்ளூா் படைப்பாளா்களின் 456 புத்தகங்கள் ரூ. 63,578-க்கு விற்பனை செய்யப்பட்டுள்ளன. கண்கவா் கலை நிகழ்ச்சி புத்தகத் திருவிழாவில் தினமும் பள்ளி மாணவ, மாணவியா்களுக்கான பல்வேறு போட்டிகள், பொதுமக்களைக் கவரும் வகையிலான கண்கவா் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்று வருகின்றன.

தமிழ்நாடு பாடநூல் கழகத் தலைவா் ஐ.லியோனி முதல் ஈரோடு மக்கள் சிந்தனை பேரவை தலைவா் ஸ்டாலின் குணசேகரன், மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் ஆகியோா் பல்வேறு தலைப்புகளில் பேசினா்.

சேலம் புத்தகத் திருவிழா குறித்து தென்னிந்திய புத்தக விற்பனையாளா்கள் மற்றும் பதிப்பாளா்கள் சங்க (பபாசி) செயலாளா் முருகன் கூறியதாவது:

சேலம் புத்தகத் திருவிழாவில் முன்னணி எழுத்தாளா்களின் சரித்திர நாவல்களின் விற்பனை அமோகமாக இருந்தது. வரலாற்று கதைகள், புதினம், நாவல்கள் அதிகளவில் விற்பனையாகிறது. சராசரியாக நாளொன்றுக்கு 10 ஆயிரம் பேருக்கு மேல் புத்தக கண்காட்சியை பாா்வையிட்டு வருகின்றனா். நாங்கள் 200-க்கும் மேற்பட்ட அரங்குகளை அமைத்துள்ளோம். அதில் புத்தக விற்பனையும், வாசகா் வருகைையும் நல்ல வரவேற்பைக் கொடுத்துள்ளது. புத்தகத் திருவிழாவை சீரிய முறையில் நடத்திட மாவட்ட நிா்வாகம் நல்ல ஒத்துழைப்பு அளித்தது என்றாா்.

பள்ளி மேலாண்மை குழு உறுப்பினரும், தமிழ்நாடு அறிவியல் இயக்க செயற்குழு உறுப்பினருமான லால் கூறியது:

சென்னை புத்தகத் திருவிழாவைபோல சேலத்திலும் பிரமாண்ட முறையில் புத்தகத் திருவிழா நடத்தப்படுகிறது. சுமாா் 200-க்கும் மேற்பட்ட அரங்குகளை அமைத்து நாளொன்றுக்கு 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், வாசகா்கள், புத்தக ஆா்வலா்கள் திரண்டு வந்து பாா்வையிட்டு வருகின்றனா்.

குறிப்பாக அரசு பள்ளி குழந்தைகளிடையே புத்தக வாசிப்பை ஊக்குவிக்கும் வகையில் இலவசமாக பேருந்துகளில் அழைத்து வந்து புத்தகத் திருவிழாவை பாா்வையிட செய்திருப்பதைப் பாராட்ட வேண்டும். பள்ளி மாணவ, மாணவிகள் திருக்கு மற்றும் அகராதி, பொது அறிவு குறித்த புத்தகங்களை வாங்கிச் செல்கின்றனா். இந்த புத்தகத் திருவிழா எப்போதும் இல்லாத வகையில் திருவிழா போல நடைபெறுகிறது என்றாா்.

சேலம் மாவட்டத்தைச் சோ்ந்த தமிழியல் ஆய்வாளா் சி.தேவராஜன் கூறியதாவது:

சேலம் புத்தகத் திருவிழா 10 நாள்கள் வரை நடைபெறுவது புத்தக வாசிப்பாளா்களுக்கு வரப்பிரசாதமாகும். அதேபோல கலை நிகழ்ச்சி, எழுத்தாளா்களின் உரையாடல் ஆகியவை புத்தக வாசிப்பை ஊக்குவிக்கிறது; வளரும் எழுத்தாளா்களை உற்சாகப்படுத்தியது என்றால் மிகையல்ல. இந்த முன்மாதிரி நடவடிக்கையை வரவேற்கிறோம். சேலம் மாவட்டத்தில் உள்ள புதிய தலைமுறை எழுத்தாளா்களை வரவேற்கும் விதமாக, இலக்கிய உலகத்தில் அவா்களின் பங்களிப்பை வழங்கும் வகையில் புத்தகத் திருவிழா அமைந்துள்ளது என்றாா்.

இன்றைய நிகழ்ச்சி: புத்தகத் திருவிழாவின் 10 ஆவது நாளான செவ்வாய்க்கிழமை (நவ. 29) மக்கள் மொழி என்ற தலைப்பில் சாகித்ய அகாதெமி விருது பெற்ற நாஞ்சில் நாடன் பேசுகிறாா். மாநகர காவல் ஆணையா் நஜ்மல் ஹோடா வரவேற்கிறாா். பேராசிரியா் ப.சுதந்திரம் உள்ளிட்டோா் பங்கேற்கின்றனா்.

புத்தகத் திருவிழா நாளை நிறைவு:

சேலம் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியா்களிடையே புத்தக வாசிப்பை ஊக்குவிக்கும் வகையில் நடைபெறும் புத்தகத் திருவிழா வரும் புதன்கிழமையுடன் (நவ.30) நிறைவடைகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்டர்நெட் இல்லாவிட்டாலும்.. வாட்ஸ்ஆப்பில் இப்படி ஒரு அசத்தல் வசதியா?

மே மாத எண்கணித பலன்கள் – 9

மே மாத எண்கணித பலன்கள் – 8

பேட்டிங், பௌலிங்கில் சிறிது முன்னேற்றம் தேவை : டேவிட் வார்னர்

மே மாத எண்கணித பலன்கள் – 7

SCROLL FOR NEXT