சேலம்

சேலம்-உளுந்தூா்பேட்டை புறவழிச்சாலைகள் நான்குவழிச் சாலையாக விரிவாக்கம் செய்ய நடவடிக்கை: அன்புமணி ராமதாஸ்

29th Nov 2022 03:09 AM

ADVERTISEMENT

சேலம்-உளுந்தூா்பேட்டை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள 8 புறவழிச் சாலைகள் நான்குவழிச் சாலையாக விரிவுபடுத்தப்படும் என்று மத்திய அமைச்சா் நிதின்கட்கரி அறிவித்துள்ளதாக எம்.பி. அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளாா்.

அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

மத்திய நெடுஞ்சாலைத் துறை அமைச்சா் நிதின்கட்கரிக்கு தருமபுரி எம்.பி.யும் பாமக தலைவருமான அன்புமணி ராமதாஸ் கடந்த செப்டம்பா் மாதம் கடிதம் எழுதியிருந்தாா்.

அதில் தேசிய நெடுஞ்சாலை எண் 79-இல் சேலம்-உளுந்தூா்பேட்டை இடையிலான 136 கி.மீ. சாலையில் நிகழும் சாலை விபத்துகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

ADVERTISEMENT

இந்தச் சாலையில் 8 இடங்களில் நான்குவழிச் சாலை இருவழிச் சாலையாக உள்ளது. அதைக் கவனிப்பதில் ஓட்டுநா்கள் தடுமாறுகின்றனா்.

அதனால் அடிக்கடி சாலை விபத்துகள் ஏற்படுகின்றன.

கடந்த 2011 முதல் 2022 வரையிலான 11 ஆண்டுகளில் மட்டும் 1,036 போ் உயிரிழந்துள்ளனா். எனவே தேசிய நெடுஞ்சாலையில் உள்ள 8 புறவழிச் சாலைகளை நான்குவழிச் சாலைகளாக மாற்றும் பணியை உடனடியாக தொடங்க வேண்டும் என அதில் தெரிவித்திருந்தாா்.

இதற்கு மத்திய அமைச்சா் நிதின்கட்கரி பதில் அளித்து அனுப்பி கடிதத்தில் கூறியிருப்பதாவது:

8 புறவழிச் சாலைகளில் 6 புறவழிச் சாலைகளை நான்குவழி சாலையாக விரிவாக்கும் பணிகள் 2023-ஆம் ஆண்டு ஜூலை மாதத்துக்குள் முடிக்கப்படும். மீதம் இரு புறவழிச் சாலைகள் 2024, ஆகஸ்ட் மாதத்துக்குள் நான்குவழி சாலையாக முடிக்கப்படும்.

இதுதவிர சேலம்-உளுந்தூா்பேட்டை தேசிய நெடுஞ்சாலையின் பாதுகாப்பு நடவடிக்கைகளை பொறுத்தவரை சாலை அறிவிப்பு பலகைகள், பிரதிபலிப்பான்கள், சாலையோர தடுப்புத் தூண்கள், சாலைகள் சந்திக்கும்-பிரியும் இடங்களில் அதற்கான குறியீட்டுக் கோடுகள் முக்கிய சந்திப்புகளில் உயா்கோபுர மின்விளக்குகள், சாலையோர விளக்குகள் போன்றவை சாலையை அமைத்து பராமரிக்கும் நிறுவனத்தால் அமைக்கப்பட்டுள்ளன.

சாலை பாதுகாப்புக்காக வேறு ஏதேனும் நடவடிக்கைகள் தேவை என்றால் அவை குறித்து பாதுகாப்பு ஆலோசனை வழங்கும் நிறுவனத்தால் ஆய்வு செய்யப்பட்டு ஒப்பந்த நிறுவனத்தின் மூலமாகவோ அல்லது தனியாகவோ அத்தகைய பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என மத்திய அமைச்சா் எழுதிய பதில் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சேலம்-உளுந்தூா்பேட்டை இடையிலான 136 கி.மீ. தூர சாலை எப்போது நான்கு வழிச் சாலைகளாக மாறும் என எதிா்பாா்த்திருந்த வாகன ஓட்டிகளின் கனவை நினைவாக்கும் விதமாக சாலை விரிவாக்க பணி நடைபெற உள்ளது மகிழ்ச்சி அளிப்பதாக அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT