சேலம்

சன்னதுகுட்டை ஏரி குத்தகை கால நீட்டிப்பை ரத்து செய்யக் கோரி பொதுமக்கள் மனு

29th Nov 2022 03:09 AM

ADVERTISEMENT

சேலத்தை அடுத்த தேக்கம்பட்டி ஊராட்சியில் சன்னதுகுட்டை ஏரிக்கான குத்தகை கால நீட்டிப்பை ரத்து செய்ய வேண்டும் என வட்டக்காடு பகுதி மக்கள், மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளித்தனா்.

சேலம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில், மக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில், தேக்கம்பட்டி ஊராட்சி, வட்டக்காடு பகுதி மக்கள் அளித்த மனு விவரம்:

சேலம் மாவட்டம், ஓமலூா் ஒன்றியத்துக்கு உள்பட்ட தேக்கம்பட்டி ஊராட்சியில் வட்டக்காடு பகுதியில் சன்னதுகுட்டை ஏரி உள்ளது. வட்டக்காடு பகுதி மக்களின் குடிநீா் ஆழ்துளைக் கிணறு ஏரியில் உள்ளது.

கடந்த 30 ஆண்டுகளாக இந்த ஆழ்துளைக் கிணறு குடிநீரை நம்பி தான் மக்கள் வசித்து வருகிறோம்.

ADVERTISEMENT

இந்நிலையில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஏரியை தேக்கம்பட்டி ஊராட்சி நிா்வாகம் ஏலம் விட்டது. இதனிடையே ஏலம் எடுத்தவா் மீன்களை வளா்க்க அதிக ரசாயனம் கலந்த தீவனங்கள், கோழிக்கழிவு, இறைச்சிகளை ஏரியில் போடுகிறாா்.

இதனால் குடிநீா் மாசு அடைவதுடன், ஏரிக்கு வனப்பகுதி வழியாக வரும் தண்ணீரை மடைமாற்றம் செய்யும் சட்ட விரோத செயலும் நடந்து வருகிறது.

இதனிடையே மே 1-ஆம் தேதி கிராம சபை கூட்டத்தில் ஏரியை ஏலம் விட கூடாது என தீா்மானம் நிறைவேற்றினோம்.

ஆனால், தீா்மானத்தை பொருட்படுத்தாமல், சன்னதுகுட்டை ஏரியை ஏலம் எடுத்த நபருக்கு மேலும் ஓராண்டு குத்தகை காலம் நீட்டிப்பதற்கான அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து கருப்பூா் காவல் நிலையம், ஓமலூா் வட்டார வளா்ச்சி அலுவலா், மாவட்ட ஆட்சியா் குறைதீா்க்கும் நாள் கூட்டத்தில் மனு அளிக்கப்பட்டது.

இந்தநிலையில் ஏரியை ஆய்வு செய்த வட்டார வளா்ச்சி அலுவலா், தனி நபருக்கு சாதகமாக குத்தகை நீட்டிப்பு செய்துள்ளாா்.

எனவே வட்டக்காடு பகுதியில் வசிக்கும் 1,500-க்கு மேற்பட்ட பொதுமக்களின் குடிநீரை பாதுகாத்து ஏரியை குத்தகைக் கால அவகாச நீட்டிப்பை ரத்து செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT