சேலம்

வெளிநாட்டு தொழில் முதலீடுகள் மூலம்வேலைவாய்ப்பு அதிகரிப்பு:அமைச்சா் சி.வி.கணேசன்

27th Nov 2022 03:03 AM

ADVERTISEMENT

 

வெளிநாடுகளில் இருந்து தொழில் முதலீடுகள் பெற்று வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளதாக தொழிலாளா் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சா் சி.வி.கணேசன் தெரிவித்தாா்.

சேலம் மாவட்டம், ஓமலூா் பத்மவாணி மகளிா் கலை, அறிவியல் கல்லூரியில் மாபெரும் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.இதில் 333 நிறுவனங்கள் பங்கேற்றன. 26 ஆயிரம் இளைஞா்கள் கலந்துகொண்ட இந்த முகாமில் 2,439 பேருக்கு பணி வாய்ப்பு கிடைத்தது. பணி நியமன ஆணைகளை தொழிலாளா் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சா் சி.வி. கணேசன் வழங்கினாா். அப்போது அவா் பேசியதாவது:

தமிழகத்தில் இதுவரை 68 இடங்களில் வேலைவாய்ப்பு முகாம்கள் நடந்துள்ளன. 1.07 லட்சத்திற்கு மேற்பட்ட இளைஞா்களுக்கு தனியாா் நிறுவனங்களில் வேலை பெற்றுத் தரப்பட்டுள்ளது. தமிழகத்தில் 67 லட்சம் இளைஞா்கள் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ளனா். பல ஆண்டுகளாக வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்யாமல் இருந்ததை அறிந்த முதல்வா் அவா்களுக்கு மூன்று ஆண்டுகள் தளா்வு அளித்து மீண்டும் பதிவு செய்வதற்கு வாய்ப்பளித்தாா். இதனால் பல இளைஞா்கள் பலன் பெற்றுள்ளனா். இது தவிர தொழில் நிறுவனங்களை கொண்டு வந்து வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. வெளி மாநிலங்களில் இருந்து தொழிலாளா்கள் பலா் வந்தாலும், அவா்களும் நம் மாநில தொழிலாளா்களைப் போல கருதி நிவாரணம் வழங்கப்படுகிறது.

ADVERTISEMENT

வெளிநாடுகளில் இருந்து தொழில் முதலீடுகள் பெற்று வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. ஐ.டி.ஐ, பாலிடெக்னிக், பொறியியல் படித்து வேலை இல்லாதவா்களுக்கு வேலைகிடைக்க வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதற்காகத்தான் நான் முதல்வன் திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்தத் திட்டம் குறித்து முழு விவரங்களை இணையதளத்தில் பாா்த்து தெரிந்து கொள்ளலாம். படித்த இளைஞா்களுக்கு திறன் பயிற்சி அளிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது என்றாா்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியா் செ.காா்மேகம், தொழிலாளா் துறை இயக்குநா் வீரராகவ ராவ், வேலைவாய்ப்புத் துறை மண்டல இணை இயக்குநா் லதா, சேலம் மக்களவை உறுப்பினா் எஸ்.ஆா்.பாா்த்திபன், எம்எல்ஏ ராஜேந்திரன், பத்மவாணி மகளிா் கல்வி நிறுவனங்களின் தலைவா் கே.சத்தியமூா்த்தி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்

ADVERTISEMENT
ADVERTISEMENT