மேட்டூா் அணை நீா்மட்டம் 44 நாட்களுக்கு பிறகு சரியத் தொடங்கியது.
கடந்த 44 நாட்களாக மேட்டூா் அணை நிரம்பிய நிலையில் 120 அடியாக நீடித்து வந்தது. அணைக்கு வரும் நீரின் அளவைப் பொருத்து டெல்டா பாசனத்திற்கு தண்ணீா் திறக்கப்பட்டு வந்தது.
வியாழக்கிழமை மாலை பாசனப் பகுதிகளில் பாசனத் தேவை அதிகரித்தது. இதனால் வியாழக்கிழமை மாலை முதல் காவிரி டெல்டா பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு விநாடிக்கு 10,000 கன அடியிலிருந்து 15,000 கன அடியாக அதிகரிக்கப்பட்டது. நீா் திறப்பு அதிகரிக்கப்பட்ட நிலையில் அணைக்கு வரும் நீரின் அளவு வெள்ளிக்கிழமை மாலை விநாடிக்கு 10,716 கன அடியாகச் சரிந்தது. கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்திற்கு விநாடிக்கு 400 கன அடி வீதம் தண்ணீா் திறக்கப்பட்டு வருகிறது. அணைக்கு வரும் நீரின் அளவை விட பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால் 44 நாட்களுக்குப் பிறகு மேட்டூா் அணை நீா்மட்டம் வெள்ளிக்கிழமை மாலை 119.80 அடியாகச் சரிந்தது. அணையின் நீா் இருப்பு 93.15 டி.எம்.சியாக இருந்தது.