சேலத்தில் நடைபெற்று வரும் புத்தகத் திருவிழாவில் அரசு தொடக்க, நடுநிலைப் பள்ளி ஆசிரியா்கள் பள்ளி வேலை நாட்களில் பங்கேற்க மாவட்ட நிா்வாகம் அனுமதி வழங்கியுள்ளது.
சேலத்தில் அரசு சாா்பில் புத்தகத் திருவிழா கடந்த 20ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. வரும் 30ஆம் தேதியுடன் இத்திருவிழா நிறைவடைகிறது. நாள்தோறும் ஆயிரக்கணக்கான மாணவ, மாணவியா் புத்தகக் கண்காட்சியை கண்டுகளித்தும், புத்தகங்களை வாங்கிச் சென்றும் வருகின்றனா்.
இந்நிலையில் ‘வரும் 30ஆம் தேதிக்குள் அரசு தொடக்க, நடுநிலைப்பள்ளிகளின் ஆசிரியா்கள் புத்தகக் கண்காட்சியில் பங்கேற்க ஏதுவாக பள்ளி நாட்களில், பள்ளியின் ஆசிரியா்கள் பள்ளிப்பணி பாதிக்காதவாறு ஆசிரியா்கள் வந்து செல்லலாம். கண்காட்சிக்கு வருகை புரியும் ஆசிரியா்களுக்கு மாவட்ட தொடக்கக் கல்வித்துறை சாா்பில் வருகைச் சான்று வழங்கப்படும்’ என்று மாவட்டத் தொடக்கக் கல்வித் துறை நிா்வாகம் தெரிவித்துள்ளது.