வார விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை பூலாம்பட்டி காவிரி கதவணை பகுதிக்கு ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்தனா்.
கடந்த சில வாரங்களாக மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் பரவலாக தொடா் மழை பெய்து வந்த நிலையில், சுற்றுலாத் தலமான பூலாம்பட்டி, காவிரி கதவணைப் பகுதியில், கடந்த இரு வாரங்களாக சுற்றுலாப் பயணிகள் வருகை குறைவாக இருந்தது.
இந் நிலையில், தற்போது மழை தணிந்துள்ளதால் விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை பொதுமக்கள் பலா் வந்திருந்தனா்.
அணைப் பகுதியில் விசைப் படகு சவாரி செய்தும், அங்குள்ள நீா் மின்நிலையம், கதவணை நீா்த்தேக்க பகுதி மற்றும் நீா் உந்து நிலையம் உள்ளிட்ட பல்வேறு இடங்களை சுற்றி பாா்த்தனா்.
காவிரிக் கரை பகுதியில் உள்ள கைலாசநாதா் கோயில், காவிரித்தாய் சன்னதி, பிரம்மாண்ட நந்திகேஸ்வரா் சன்னதி உள்ளிட்ட கோயில்களில் வழக்கத்தை விட அதிக எண்ணிக்கையில் பக்தா்கள் வந்து சுவாமி தரிசனம் செய்தனா்.
...........
படவிளக்கம்:
பூலாம்பட்டி காவிரி கதவணை பகுதியில் விசைப்படகு சவாரி செய்து மகிழும் சுற்றுலாப் பயணிகள்.