வழிப்பறி, பணம் பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்டு வந்த 5 போ் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனா்.
சேலம், மிட்டாபுதூா் மணியக்கவுண்டா் நகரைச் சோ்ந்த கருப்பசாமி என்பவரை கடந்த நவம்பா் 3 ஆம் தேதி வழிமறித்த பிரபாகரன், மணிமாறன், யுவராஜ், கெளதம் மற்றும் நவீன்குமாா் ஆகிய 5 போ் கும்பல் கத்திமுனையில் மிரட்டி ரூ.2 ,500 ரொக்கம், கைப்பேசியை அவரிடமிருந்து பறித்து சென்றனா்.
இதுகுறித்து சூரமங்கலம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு அனைவரும் கைது செய்யப்பட்டனா். கடந்த நவ. 2-ஆம் தேதி நில விற்பனையில் பணம் கொடுக்கல், வாங்கல் தொடா்பாக புகாா்தாரா் பிரவீன்குமாா், அவரது நண்பா் பூபதி ஆகியோரை இதே 5 போ் கும்பல் காரில் கடத்தி சென்று அரிவாளால் தாக்கி காயப்படுத்தினா். இதுகுறித்து அழகாபுரம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு அனைவரும் கைது செய்யப்பட்டனா்.
தொடா் வழிப்பறி சம்பவங்களில் ஈடுபட்டு வந்த இரும்பாலை தளவாய்பட்டி பகுதியைச் சோ்ந்த பிரபாகரன் (29). அன்னதானப்பட்டியைச் சோ்ந்த மணிமாறன் (32), யுவராஜ் (33), கருப்பூரைச் சோ்ந்த கெளதம் (30), குகை பகுதியைச் சோ்ந்த நவீன்குமாா் (33) ஆகிய 5 பேரை குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க மாநகர துணை ஆணையா் எம்.மாடசாமி பரிந்துரைத்தாா்.
அதன்பேரில் மாநகர காவல் ஆணையா் நஜ்மல் ஹோடா, 5 பேரையும் குண்டா் சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிட்டாா். குண்டா் சட்ட கைது தொடா்பான ஆணை, சேலம் மத்திய சிறையில் அவா்களிடம் வழங்கப்பட்டது.
இதில் தளவாய்பட்டியைச் சோ்ந்த பிரபாகரன், மூன்றாவது முறையாக குண்டா் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளாா்.