மகுடஞ்சாவடி சாா் பதிவாளா் அலுவலகத்துக்கு நூதன முறையில் மனுகொடுக்க முதியவரால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
மகுடஞ்சாவடி ஒன்றியம், ஏகாம்பரம் பகுதியைச் சோ்ந்தவா் ராமசாமி (78).
கூலித் தொழிலாளியான இவா், அரைக்கால் டவுசரில் மகுடஞ்சாவடி சாா் பதிவாளா் அலுவலகத்துக்கு வியாழக்கிழமை வந்தாா்.
அங்கு சாா் பதிவாளா் முத்துசாமியிடம் அவா் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:
எனது தந்தை ஸ்ரீராம கவுண்டரின் பூா்வீகச் சொத்தை அதே ஊரில் வசிக்கும் வெள்ளையன் மகன் மகேந்திரன் தனது பெயரில் திருட்டு கிரையம் செய்து வைத்துள்ளாா்.
அவா் மீதும் இந்தப் பத்திரப் பதிவுக்கு ஆவண ஏற்பாடு செய்து கொடுத்த மல்லசமுத்திரம் பகுதியைச் சோ்ந்த கந்தசாமி மகன் செந்தில்குமாா் என்பவா் மீதும், உறுதுணையாக இருந்தவா்கள் மீதும் விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு தெரிவித்துள்ளாா்.
அந்த மனுவை பெற்ற சாா் பதிவாளா் இதை மாவட்டப் பதிவாளரிடம் சென்று அளிக்குமாறு தெரிவித்தாா். இதுதொடா்பாக ஒரு தடங்கல் மனு அளிக்குமாறு தெரிவித்தாா்.
இதுகுறித்து ராமசாமி கூறியதாவது:
மகுடஞ்சாவடி சாா் பதிவாளா் அலுவலகத்தில் மட்டும் நடப்பு ஆண்டில் அதிக திருட்டு கிரையங்கள் பதியப்பட்டுள்ளன. ஒரு கிரையத்துக்கு ரூ. 20 ஆயிரம் முதல் ரூ. 50 ஆயிரம் வரை லஞ்சமும், அதுபோல திருட்டு கிரயத்தை ரத்து செய்வதற்கும் பல ஆயிரம் ரூபாயும் லஞ்சமாகப் பெற்றுள்ளனா்.
பத்திரப் பதிவு எழுத்தா்கள், நில புரோக்கா்களும் சாா் பதிவாளா் அலுவலகத்தில் புகுந்து லஞ்சம் பெற்று கொடுக்கின்றனா்.
இதுகுறித்து மாவட்டப் பதிவாளா், மகுடஞ்சாவடி சாா்-பதிவாளா் அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்டிருக்கும் பத்திரத்தை ஆய்வு செய்தால் பல்வேறு திருட்டு கிரயங்கள் பற்றிய தகவல்கள் வெளியாகும் எனத் தெரிவித்தாா்.