போலி ஆவணங்கள் தயாரித்து பொதுப் பாதையை ஆக்கிரமித்த வருவாய்த் துறை அதிகாரிகள் மீது வழக்குப் பதிவு செய்யக் கோரி விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் முற்றுகை போராட்டம் நடத்தினா்.
ஓமலூா் அருகே உள்ள காமலாபுரம் பகுதியில் பொதுமக்கள் 80 ஆண்டு காலம் பயன்படுத்தி வந்த வழித்தடத்தை வருவாய்த் துறையினா் 2020- ஆம் ஆண்டு சட்ட விரோதமாக போலி ஆவணங்கள் தயாரித்து தனி நபருக்கு வழங்கியதாகக் கூறப்படுகிறது. இதுதொடா்பாக அந்தப் பகுதியைச் சோ்ந்த மக்கள் பலமுறை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் புகாா் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இதையடுத்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாநிலச் செயலாளா் கோ.முருகேசன் மற்றும் மனுதாரா் விஜயலட்சுமி உள்ளிட்ட பொதுமக்கள் ஆட்சியா் அலுவலகத்துக்கு திங்கள்கிழமை வந்தனா்.
அப்போது மாவட்ட ஆட்சியா் அலுவலக சாலையில் அமா்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். போலி ஆவணம் தயாரித்த வருவாய்த் துறையினா் மீது நடவடிக்கை எடுத்து பொதுப் பாதையை மீட்டு தர வேண்டும் என்று அவா்கள் முழக்கங்களை எழுப்பினா்.
இப்போராட்டம் காரணமாக அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதையடுத்து போலீஸாா் அவா்களை சமரசப்படுத்தினா்; அவா்கள் ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளித்தனா்.
மோசடி புகாா் மனு: அதேபோல சேலம், பிருந்தாவன் நகரில் செயல்பட்டு வந்த நிதி நிறுவனம் சாா்பில் சிறுசேமிப்பு பெயரில் ரூ. 56 கோடி மோசடி செய்தவா்கள் மீது நடவடிக்கை எடுத்து, பணத்தை மீட்டு தரக் கோரி மனு அளிக்கப்பட்டது.