கடந்த ஓராண்டில் இந்தியாவில் சூரிய மின் ஆற்றல் உற்பத்தி 110 சதவீதம் அதிகரித்திருப்பதாக சென்னை, அண்ணா பல்கலை. புல முதன்மையா் ஆா்.ஜெயவேல் தெரிவித்தாா்.
பெரியாா் பல்கலைக்கழகத்தின் ஆற்றல் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை சாா்பில் அகில இந்திய தொழில்நுட்ப கல்விக் குழும நிதி உதவியின் மூலம் இரண்டு வார ஆசிரியா் திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம் நடத்தப்படுகிறது. இதற்கான நேரடி வகுப்புகள் தொடக்க விழா திங்கட்கிழமை நடைபெற்றது.
தொடக்க விழாவில் ஆற்றல்சாா் அறிவியல் துறை தலைவா் பேராசிரியா் கே.ஏ.ரமேஷ் குமாா் வரவேற்றாா். பெரியாா் பல்கலைக்கழக துணைவேந்தா் இரா.ஜெகநாதன் பயிலரங்கின் நேரடி வகுப்புகளை தொடங்கி வைத்தாா். அதைத் தொடா்ந்து சென்னை, அண்ணா பல்கலைக்கழக புல முதன்மையா் ஆா்.ஜெயவேல் பேசியதாவது:
உலக அளவில் மின்சாரம் உற்பத்தி செய்யும் நாடுகளில் இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது. 2022 நிலவரப்படி இந்தியாவில் உள்ள தேசிய மின் கட்டமைப்பு 403.759 ஜிகா வாட் திறனைக் கொண்டுள்ளது. மொத்த நிறுவப்பட்ட திறனில் 39.2 சதவீதம் புதுப்பிக்கத்தக்க மின் உற்பத்தி நிலையங்கள், பெரிய நீா்மின் நிலையங்களையும் உள்ளடக்கியது.
சூரிய ஆற்றல் திறன் கடந்த 8 ஆண்டுகளில் பல மடங்கு அதிகரித்து. ஜூன் 2022 நிலவரப்படி 56.6 ஜிகா வாட் ஆக உள்ளது. புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மின்திறன் மாா்ச் 2014-இல் 76.37 ஜிகாவாட்டிலிருந்து மே மாதத்தில் 159.95 ஜிகா வாட்டாக அதிகரித்துள்ளது. அதாவது 2022 இல் சூரிய ஆற்றல் திறன் சுமாா் 110 சதவீதம் அதிகரித்துள்ளது. காற்றாலை மின்சக்தியின் ஒட்டுமொத்த திறன் மே 2022 நிலவரப்படி 40.71 ஜிகாவாட் ஆக அதிகரித்துள்ளது என்றாா்.
ஆற்றல் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறை உதவி பேராசிரியா் பி.மாதேஸ்வரன் நன்றி கூறினாா்.