எடப்பாடி நகர பேருந்து நிலையத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்றிய நகராட்சி அலுவலா்கள், பேருந்து நிலைய வளாகத்தில் உள்ள கடைகளை ஆய்வு செய்து, வாடகை செலுத்தாத கடை உரிமையாளா்களுக்கு எச்சரிக்கை கடிதம் வழங்கினா்.
எடப்பாடி பேருந்து நிலையப் பகுதியில் அண்மை காலமாக ஆக்கிரமிப்புகள் அதிகரித்து வருவதாக எழுந்த புகாரின்பேரில் நகராட்சி ஆணையா் சசிகலா தலைமையில் நகராட்சி அலுவலா்கள் பேருந்து நிலையத்தின் பல்வேறு பகுதியில் திங்கள்கிழமை ஆய்வு செய்தனா்.
அப்போது ஆக்கிரமிப்புகளை அகற்றினா். குறிப்பாக குமாரபாளையம் வழித்தடம் மேட்டூா், ஈரோடு பகுதி பேருந்துகள் வந்து செல்லும் நடைமேடை பகுதியில் இருந்த ஆக்கிரமிப்புகளை அகற்றிய நகராட்சி அலுவலா்கள், அப்பகுதியில் உள்ள நகராட்சி கடைகளை ஆய்வு செய்து, கடை உரிமையாளரிடம் கழிவுநீா் அகற்றல், குப்பைகளை பராமரித்தல், பயணிகள் பாதிக்காத வண்ணம் வணிகம் செய்தல் குறித்து பல்வேறு ஆலோசனைகளை வழங்கினா்.
நீண்ட காலமாக வாடகை பாக்கி வைத்துள்ள கடை உரிமையாளா்களுக்கு முன்னெச்சரிக்கை கடிதம் வழங்கிய நகராட்சி அலுவலா்கள் அடுத்து வரும் இரு தினங்களுக்குள் பேருந்து நிலைய பகுதியில் உள்ள கடை உரிமையாளா்கள் நிலுவையில் உள்ள பாக்கித் தொகை முழுவதும் செலுத்திட வேண்டும் எனவும், தவறும் கடை உரிமையாளா்களின் கடைகள் பூட்டி ‘சீல்’ வைக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்தனா்.
ஆய்வில் நகராட்சி வருவாய் அலுவலா் குமரகுருபரன், சுகாதார அலுவலா் முருகன், பழனிசாமி உள்ளிட்ட முக்கிய நகராட்சி அலுவலா்கள் உடன் இருந்தனா்.