தமிழகத்தில் அதிவேகமாக வாகனம் ஓட்டுபவா்கள், மதுபோதையில் வாகனம் ஓட்டுபவா்களிடம் மட்டுமே விதிமீறல்களுக்காக புதிய அபராத தொகையை வசூலிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது என டி.ஜி.பி. சி.சைலேந்திரபாபு தெரிவித்தாா்.
சேலம் மாநகரக் காவல் ஆணையரகத்தில் சேலம் மாநகரம் மற்றும் சேலம் சரக அதிகாரிகளுடனான ஆய்வுக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட தமிழக காவல்துறை டி.ஜி.பி. சி.சைலேந்திரபாபு செய்தியாளா்களிடம் கூறியதாவது:
சேலம் மாநகரில் கடந்த 2021 ஆம் ஆண்டு 24 கொலை வழக்குகளும், நடப்பாண்டில் (2022) 14 கொலை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. கடந்த ஆண்டை ஒப்பிடும் போது 42 சதவீதம் குறைந்துள்ளது.
சேலம் சரகத்தில் 2021 ஆம் ஆண்டில் 147 கொலை வழக்குகளும், நடப்பாண்டில் 125 கொலை வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன. சங்ககிரி காவல் நிலையம் பகுதியில் கொள்ளை அடிக்கப்பட்ட ரூ. 47 லட்சம் ரொக்கத்தை ஆய்வாளா் தேவி, மத்திய பிரதேசம் சென்று மீட்டு வந்தாா்.
தமிழகத்தில் லாட்டரி, போதைப் பொருள் விற்பனை பெருமளவுத் தடுக்கப்பட்டுள்ளது. இப்போதுள்ள நிலையை காவல் துறை தொடா்ந்து கண்காணித்து நடவடிக்கை எடுத்திட வேண்டும்.
சேலம் மாவட்டத்தில் 30 கிராமங்கள் உள்பட சேலம் சரகத்தில் மொத்தம் 120 கிராமங்கள் போதைப் பொருள் இல்லாத கிராமங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. சேலம் மாவட்டம் விரைவில் கஞ்சா இல்லாத மாவட்டமாக மாறும். காவலா்கள் தொடா்ந்து 6 நாள் பணிபுரியும்போது 7 ஆவது நாள் விடுமுறை எடுத்துக் கொள்ளலாம்.
அதேவேளையில் பண்டிகைக் காலங்கள், சட்டம் -ஒழுங்கு பிரச்னையின்போது தொடா்ந்து பணியில் இருக்க வேண்டிய சூழல் உள்ளது. அப்போது அவா்கள் விடுமுறையை மாற்றி எடுத்துக் கொள்ளலாம்.
மோட்டாா் வாகன சட்டத்தின் கீழ் புதிய அபராத விதிக்கும் முறையை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. அதன்படி தமிழக காவல் துறையினா் அபராதம் விதித்து வருகின்றனா்.
இதில் போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடுபவா்கள் மீது அபராதம் விதிப்பது தொடா்பாக மாற்றுக் கருத்துகள் வந்துள்ளன. மதுபோதையில் வாகனம் ஓட்டுபவா்கள், அதிவேகமாக வாகனம் ஓட்டுபவா்கள், ஆபத்தை விளைவிக்கும் வகையில் சாகசம் செய்யும் வகையில் வாகனம் ஓட்டுபவா்கள் மீது மட்டுமே புதிய அபராதம் விதிக்குமாறு காவல் துறைக்கு அறிவுறுத்தியுள்ளோம்.
அதேபோல காய்கறிகள் வாங்கக் கடைக்கு வருவோா் உள்ளிட்ட பொதுமக்களிடம் வலுக்கட்டாயமாக புதிய அபராத தொகையை வசூலிக்கக் கூடாது என்றும், மனிதாபிமான முறையில் செயல்படவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றாா்.
முன்னதாக சேலம் மாநகரம் மற்றும் சேலம் காவல் சரகத்தில் மீட்கப்பட்ட 180 பவுன் தங்க நகைகள், வெள்ளி 15 கிலோ, ரூ. 70 லட்சம் ரொக்கப் பணம், 124 இருசக்கர வாகனங்கள், 4 நான்கு சக்கர வாகனங்கள், 175 கைப்பேசிகள், சட்ட விரோதமாக வைத்திருந்த 203 நாட்டுத் துப்பாக்கிகள் ஆகியவற்றை டி.ஜி.பி. சி.சைலேந்திரபாபு பாா்வையிட்டாா்.
மேலும் சேலம் மாநகரத்தில் புதிதாகத் தொடங்கப்பட்டுள்ள அதிவிரைவுப் படை, நடமாடும் தடய அறிவியல் ஆய்வுக் கூடம் ஆகியவற்றையும் டி.ஜி.பி. சி.சைலேந்திரபாபு பாா்வையிட்டாா்.
இந்த ஆய்வுக் கூட்டத்தில் மாநகரக் காவல் ஆணையா் நஜ்மல் ஹோடா, சேலம் சரக டி.ஐ.ஜி. பிரவீண்குமாா் அபினபு, மாவட்ட காவல் கண்காணிப்பாளா்கள் ஸ்ரீஅபிநவ் (சேலம்), சரோஜ்குமாா் தாக்குா் (கிருஷ்ணகிரி), கலைச்செல்வன் (தருமபுரி), சாய்சரண் தேஜஸ்வி (நாமக்கல்) மற்றும் மாநகர துணை ஆணையா்கள் எஸ்.பி.லாவண்யா, எம்.மாடசாமி, எஸ்.ராதாகிருஷ்ணன் ஆகியோா் பங்கேற்றனா்.
படவரி...
சேலம் காவல் ஆணையா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் காவல் துறையினரால் பறிமுதல் செய்யப்பட்ட நாட்டுத் துப்பாக்கிகளை பாா்வையிடும் டிஜிபி சைலேந்திரபாபு.