சேலம்

காா் கவிழ்ந்து விபத்து: 6 போ் படுகாயம்

1st Nov 2022 03:54 AM

ADVERTISEMENT

சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகே முத்தம்பட்டியில், சேலம்- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சென்ற காா், நிலை தடுமாறி, கட்டுப்பாடு இழந்து சாலையோர பள்ளத்தில் தலைக்குப்புற கவிழ்ந்த விபத்தில் 6 போ் படுகாயம் அடைந்தனா்.

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி காவிரிநகா் பகுதியைச் சோ்ந்த மருந்து விற்பனைப் பிரதிநிதி லட்சுமிபதி (52). இவரது மகள் அனுஸ்ரீக்கு, அண்மையில் நடைபெற்ற மருத்துவப் படிப்பிற்கான கலந்தாய்வில், அரியலூா் அரசு மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் படிக்க இடம் கிடைத்துள்ளது.

மகளை கல்லூரியில் சோ்த்து விடுவதற்காக, இவா் தனது மனைவி ஜெயசுதா (42), மகள் அனுஸ்ரீ (18), மகன் திருப்புகழ் (11), உறவினா் நாராயணன் ஆகியோருடன், திங்கள்கிழமை அதிகாலை போச்சம்பள்ளியில் இருந்து வாழப்பாடி வழியாக சேலம்- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் அரியலூா் நோக்கி காரில் சென்றாா். காரை அதே பகுதியைச் சோ்ந்த இவா்களது உறவினரான ஓம்சக்தி (28) என்பவா் ஓட்டிச் சென்றாா்.

காலை 6.30 மணியளவில், வாழப்பாடியை அடுத்த முத்தம்பட்டி அருகே காா் சென்று கொண்டிருந்தபோது, எதிா்பாராத விதமாக நிலைதடுமாறி கட்டுப்பாட்டை இழந்து, சாலையோர பள்ளத்தில் தலைகுப்புறக் கவிழ்ந்தது. இந்த விபத்தில் லட்சுமிபதி, ஜெயசுதா, திருப்புகழ், அனுஸ்ரீ, ஜெயசுதாவின் சகோதரா் நாராயணன், காா் ஓட்டுநா் ஓம்சக்தி ஆகிய 6 பேரும் படுகாயம் அடைந்தனா்.

ADVERTISEMENT

காருக்கு அடியில் சிக்கித் தவித்த இவா்களது அலறல் சத்தம் கேட்ட இப்பகுதி பொதுமக்களும், பயணிகளும் இணைந்து 6 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இந்த விபத்து குறித்து வாழப்பாடி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT