சேலம்

எடப்பாடியில் தவறான சிகிச்சையால் பெண் உயிரிழப்பு: உறவினர்கள் மறியல்

31st May 2022 10:00 AM

ADVERTISEMENT

சேலம்: சேலம் மாவட்டம் எடப்பாடி தனியார் மருத்துவமனையில் குடும்ப கட்டுப்பாடு  செய்ய வந்த பெண்ணிற்க்கு தவறான அறுவை சிகிச்சை செய்ததில் பெண் உயிரிழந்ததால் உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டு சாலை மறியலில் ஈடுபட்டனர்.

சேலம் மாவட்டம் எடப்பாடி தனியார் மருத்துவமனையில் குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட பெண்ணிற்கு 3 முறை அறுவை சிகிச்சை செய்ததில் பெண் உயிரிழந்தார். 

ஜலகண்டாபுரம் சவுரியூர் பகுதியைச் சேர்ந்த பூபதி (31). இவரது மனைவி சங்கிதா (28). இவர்களுக்கு (11) வயதில் ஒரு பெண் குழந்தையும், (7) வயதில் ஒரு ஆண் குழந்தையும் உள்ளனர். இந்நிலையில் சங்கீதாவிற்கு குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்வதற்காக கடந்த 20 நாள்களுக்கு முன்பு எடப்பாடியில் உள்ள  தனியார் மருத்துவமனையில் சேர்ந்து குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்துகொண்டு வீடு திரும்பி உள்ளனர். 

இந்நிலையில் இரண்டு வாரங்கள் கழித்து அடிக்கடி வயிற்று வலி ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் திரும்பவும் அதே மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அப்போது மருத்துவர் பரிசோதனை செய்து வயிற்றில் ரத்தம் கட்டி உள்ளது என்று கூறி இரண்டாவது முறையாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் சங்கீதாவிற்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டு மீண்டும் அதே மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு மூன்றாவது முறையாக அறுவை சிகிச்சை செய்துள்ளனர். 

ADVERTISEMENT

இதனால் நேற்றிரவு சிகிச்சை பலனின்றி சங்கீதா பரிதாபமாக உயிரிழந்தார். தகவலறிந்த சங்கீதாவின் உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டு மருத்துவமனையின் கதவு கண்ணாடி மற்றும் கணிப்பொறியை உடைத்து தவறான அறுவை சிகிச்சை செய்த மருத்துவரை கைது செய்யக்கோரி சாலை மறியலில் ஈடுபட்டனர். 

இதுகுறித்து தகவலறிந்த எடப்பாடி வட்டாட்சியர் லெலின், துணை வட்டாட்சியர் மகேந்திரன், கொங்கணாபுரம் காவல் ஆய்வாளர்கள் ஆனந்தன், சந்திரலேகா, துணை காவல் ஆய்வாளர்கள் சிவசங்கர், பழனிசாமி மற்றும் காவல்துறையினர், வருவாய் ஆய்வாளர் முருகேசன், கிராம நிர்வாக அலுவலர் பாபு ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

மேலும், குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சையில் பெண் உயிரிழந்தையடுத்து சம்பந்தப்பட்ட மருத்துவமனைக்கு வருவாய்த்துறை அதிகாரிகள் சீல் வைத்து நடவடிக்கை மேற்கொண்டனர்

இதற்கு முன்பு இதே மருத்துவர் தவறான அறுவை சிகிச்சை செய்ததில் 3 நபர்களுக்கும் மேல் இறந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

ADVERTISEMENT
ADVERTISEMENT