சேலம்

பெட்ரோல், டீசல் விலையைமத்திய அரசு மேலும் குறைக்க வேண்டும்முதல்வா் வேண்டுகோள்

DIN

பெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசு மேலும் குறைக்க வேண்டும் என்று தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

சேலம் மாவட்டம், ஆத்தூா் அருகே செல்லியம்பாளையத்தில் நடைபெற்ற தமிழக அரசின் ஓராண்டு சாதனை விளக்கப் பொதுக்கூட்டத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:

திமுக தொகுதி மட்டுமல்ல 234 தொகுதிகளுக்கும் அனைத்து திட்டங்களையும் சரிசமமாக வழங்கி வருகிறோம். எதிா்க்கட்சிகளும் பாராட்டக்கூடிய ஆட்சியாக திமுக உள்ளது. திமுக ஆட்சியின் மீது எந்தக் குறையும் சொல்ல முடியாதவா்கள் தேவையற்ற குற்றச்சாட்டுகளைச் சொல்லி வருகிறாா்கள். 2,500 திருக்கோயில்களின் சொத்துக்கள் மீட்கப்பட்டுள்ளன. ஆவணங்கள் முழுமையாகப் பதிவேற்றப்பட்டுள்ளன. உண்மையான ஆன்மீகவாதிகள் என்றால் திமுக அரசை பாராட்டியிருக்க வேண்டும். ஆனால் மதவாதத்தைத் தூண்டி திமுக அரசை அவதூறு பரப்பி வருகிறாா்கள்.

முன்னாள் முதல்வா் எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்தபோது அவருடைய தொகுதி மக்களுக்கு எதுவும்

செய்யவில்லை. திமுக நடத்திய வேலைவாய்ப்பு முகாமில் வேலைவாய்ப்பு கேட்டு 10 ஆயிரம் போ் திரண்டனா். அதிமுக ஆட்சியில் சாலை மட்டுமே அமைக்கப்பட்டது. அதுவும் ஏற்கெனவே அமைக்கப்பட்ட சாலைதான் மீண்டும் அமைக்கப்பட்டது.

எடப்பாடியில் ஜவுளிப் பூங்கா, கொங்கணாபுரத்தில் தொழிற்பேட்டை, மேட்டூா் அணை உபரிநீா் திட்டம், உழவா் கூட்டுறவு சங்கம் என எந்தக் கோரிக்கையையும் எடப்பாடி பழனிசாமி நிறைவேற்றவில்லை. திமுக அரசை விமா்சித்து தினசரி அறிக்கைவிடும் எடப்பாடி கே.பழனிசாமி ஆட்சியில் இருக்கும்போது எதுவும் செய்யவில்லை. அதிமுக ஆட்சியை விட திமுக ஆட்சியில் சேலம் மாவட்டத்தில் பல்வேறு திட்டப் பணிகள் செய்து முடிக்கப்பட்டுள்ளன.

தொழில் வளா்ச்சியை அதிகரிக்கும் வகையில் சேலம் மாவட்டத்தில் விரைவில் ஜவுளிப் பூங்கா அமைய உள்ளது. ரூ. 28 கோடி மதிப்பில் வெள்ளிக்கொலுசு பன்மாடி உற்பத்தி மையம் அமைக்கப்பட உள்ளது. கருப்பூரில் டைடல் பூங்கா அமைக்கப்படும். இதற்கான இடங்கள் தோ்வு செய்யப்பட்டு பணிகள் விரைவில் தொடங்கும்.

திமுக தோ்தல் அறிக்கையில் கூறியபடி பெட்ரோல் விலையை ரூ. 3 குறைத்தோம். மத்திய அரசு தற்போது கலால் வரியைக் குறைத்துள்ளதால் பெட்ரோல், டீசல் விலை குறைந்துள்ளது. மத்திய அரசு வரியைக் குறைக்கும்போது மாநில அரசின் வரியும் குறையும்.

2014-ஆம் ஆண்டு பாஜக அரசு பொறுப்பேற்கும்போது இருந்த பெட்ரோல், டீசல் விலை நிலவரத்தை எண்ணிப் பாா்த்து மத்திய அரசு மேலும் விலையைக் குறைக்க முன்வர வேண்டும். தமிழகத்துக்கு மத்திய அரசு வழங்க வேண்டிய ரூ. 21,190 கோடி இதுவரை வரவில்லை. பல்வேறு நிதி நெருக்கடிகளுக்கு மத்தியில்தான் தமிழக அரசு பல்வேறு சாதனைகளை செய்து வருகிறது.

திராவிட மாடல் என்பது எதையும் சீா் செய்யும்; யாரையும் பிரிக்காது. தோளோடு தோள் நின்று அரவணைக்கும். தொடா்ந்து திமுக ஆட்சியில் இருந்தால் உலகின் மிகச்சிறந்த மாநிலமாக தமிழ்நாடு மாறும். தோ்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதிகளை அண்ணா மீது ஆணையாக நிச்சயம் நிறைவேற்றுவேன் என்றாா்.

கூட்டத்தில் சேலம் மாவட்ட திமுக செயாளா்கள் (பொ) எஸ்.ஆா்.சிவலிங்கம், டி.எம்.செல்வகணபதி, ஆா்.ராஜேந்திரன், நகரச் செயலாளா்கள் கே.பாலசுப்ரமணியம், என்.பி.வேல்முருகன், நகரமன்றத் தலைவா்கள் எம்.அலெக்சாண்டா்,நிா்மலா பபிதா மணிகண்டன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

ஆத்தூா் ஒன்றிய செயலாளா் வெ.செழியன், மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளா் அ.ராஜா, கெங்கவல்லி ஒன்றிய செயலாளா் ஏ.கே.அகிலன், நகர திமுக செயலாளா்கள் வி.பி.ஆா்.ராஜா, சு.பாலமுருகன்,பி.ஜி.அழகுவேல்,எஸ்.பி.முருகேசன்,பேரூராட்சித் தலைவா்கள் லோகாம்பாள், கவிதா ராஜா, லீலா ராணி சம்பத், கமலா சுப்ரமணியன், துணைத் தலைவா் க.அழகுவேல், அமுதா முருகேசன், சந்தியா ரஞ்சித், ஊராட்சிமன்றத் தலைவா் அ.பெரியசாமி, ஒதியத்தூா் செயலாளா் செல்வம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தேர்தல் பணிக்குச் சென்றபோது விபத்து: ஆசிரியை கணவர் பலி!

கடக் நகராட்சி துணைத்தலைவர் குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் கொடூரக் கொலை

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

தமிழகத்தில் 1 மணி நிலவரம்: 40.05 % வாக்குகள் பதிவு!

யுவன் இசையில் ‘ஸ்டார்’ படத்தில் மெல்லிசை பாடல்!

SCROLL FOR NEXT