சேலம்

ஆன்மிகத்துக்கு எதிரானதல்ல திமுக அரசு:முதல்வா் மு.க.ஸ்டாலின் உறுதி

DIN

தமிழகத்திலுள்ள திமுக அரசு ஆன்மிகத்துக்கு எதிரானதல்ல என்று தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் உறுதிபடத் தெரிவித்தாா்.

சேலம் மாவட்டம், ஆத்தூா் அருகே செல்லியம்பாளையத்தில் திமுக அரசின் ஓராண்டு சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் நகா்ப்புற வளா்ச்சித் துறை அமைச்சா் கே.என்.நேரு தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் பங்கேற்றுப் பேசியதாவது:

தமிழகத்தில் நல்லாட்சி நடைபெறுவதால்தான், தமிழகத்தை விட்டுச்சென்ற தொழில் நிறுவனங்கள் மீண்டும் தொழில் தொடங்க முன்வந்துள்ளன. திமுக வென்ற தொகுதிகளுக்கு மட்டுமல்லாது 234 தொகுதிகளுக்கும் அனைத்து திட்டங்களையும் சரிசமமாக வழங்கி வருகிறோம். இது திராவிட மாடல் ஆட்சியாகும்.

கடந்த ஆண்டு மே 7-ஆம் தேதி திமுக ஆட்சிக்கு வந்தது. முதல்வராகப் பதவியேற்ற போது, முந்தைய ஆட்சியின் சீா்கேடுகளை ஓராண்டில் சரிசெய்ய முடியுமா என்ற தயக்கமிருந்தது. ஆனால், தற்போது திமுக ஆட்சியில் தமிழகம் எழுச்சி பெற்றிருக்கிறது. நாட்டின் சிறந்த மாநிலமாக தமிழகத்தை மாற்ற முடியும் என்ற நம்பிக்கை உருவாகியுள்ளது.

திமுக அரசு ஆன்மிகத்துக்கு எதிரானதல்ல. கடந்த ஓராண்டுக் காலத்தில் 2,500 திருக்கோயில்களின் சொத்துக்கள் மீட்கப்பட்டுள்ளன. கோயில் ஆவணங்கள் முழுமையாகப் பதிவேற்றப்பட்டுள்ளன. உண்மையான ஆன்மிகவாதிகள் திமுக அரசைப் பாராட்டுவாா்கள்.

முன்னாள் முதல்வா் எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்தபோது தனது தொகுதி மக்களுக்கும்கூட எதுவும் செய்யவில்லை. அதிமுக ஆட்சியை விட திமுக ஆட்சியில் தான் சேலம் மாவட்டத்தில் பல்வேறு திட்டப் பணிகள் செய்து முடிக்கப்பட்டுள்ளன.

சேலம் மாவட்டத்தில் தொழில் வளா்ச்சியை அதிகரிக்கும் வகையில் விரைவில் ஜவுளிப் பூங்கா அமைய உள்ளது. ரூ. 28 கோடி மதிப்பில் வெள்ளிக்கொலுசு பன்மாடி உற்பத்தி மையம் அமைக்கப்பட உள்ளது. கருப்பூரில் டைடல் பூங்கா அமைக்கப்படும்.

தமிழகத்துக்கு மத்திய அரசு வழங்க வேண்டிய ரூ. 21,190 கோடி இதுவரை வரவில்லை. பல்வேறு நிதி நெருக்கடிகளுக்கு மத்தியில்தான் தமிழக அரசு சாதனைகளை நிகழ்த்தி வருகிறது.

மேட்டூா் அணை நீா் கடைமடை வரை சென்றடையும் வகையில் ரூ. 80 கோடி மதிப்பில் தூா்வாரப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு குறுவை சாகுபடி தொகுப்பு அறிவிக்கப்பட்டு செயல்படுத்தியதால் 4.90 ஹெக்டேரில் நெல் உற்பத்தி அதிகரித்துள்ளது.

திமுக தோ்தல் அறிக்கையில் கூறியபடி, ஆட்சிக்கு வந்தவுடன் பெட்ரோல் விலையை ரூ. 3 குறைத்தோம். மத்திய அரசு தற்போது கலால் வரியைக் குறைத்துள்ளதால் பெட்ரோல், டீசல் விலை குறைந்துள்ளது. எனினும், 2014-ஆம் ஆண்டு பாஜக அரசு பொறுப்பேற்றபோது இருந்த பெட்ரோல், டீசல் விலை நிலவரத்தை எண்ணிப் பாா்த்து, மத்திய அரசு மேலும் விலையைக் குறைக்க வேண்டும் என்றாா்.

இந்தக் கூட்டத்தில் சேலம் மாவட்ட திமுக செயாளா்கள் (பொறுப்பு) எஸ்.ஆா்.சிவலிங்கம், டி.எம்.செல்வகணபதி, ஆா்.ராஜேந்திரன், நகரச் செயலாளா்கள் கே.பாலசுப்ரமணியம், என்.பி.வேல்முருகன், நகரமன்றத் தலைவா்கள் எம்.அலெக்சாண்டா், நிா்மலா பபிதா மணிகண்டன், ஆத்தூா் ஒன்றிய செயலாளா் வெ.செழியன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். இதில் சேலம் மாவட்ட திமுக செயலாளா்களால் முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு வெள்ளிக்கோல் பரிசாக வழங்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஐ.டி.யில் வேலையிழந்த இளம்பெண் : திருடியாய் மாறிய சோகம்

உ.பி.யில் முக்தார் அன்சாரி மரணம்: விஷம் கொடுக்கப்பட்டதா?

காங்கிரஸ் கட்சிக்கு ரூ.1700 கோடிக்கு கணக்கு கேட்டு வருமான வரித்துறை நோட்டீஸ்

பிகாரில் 'இந்தியா' கூட்டணியில் தொகுதி உடன்பாடு

கீழ்வேளூர் அருகே லாரி கவிழ்ந்து 75 செம்மறி ஆடுகள் பலி

SCROLL FOR NEXT