ஓமலூா் அருகே யூடியூப் சேனலைப் பாா்த்து துப்பாக்கி தயாா் செய்ததாக இளைஞா்கள் இருவரை போலீஸாா் கைது செய்தனா்.
சேலம் மாவட்டம், ஓமலூா் அருகே சேலம்- பெங்களூா் தேசிய நெடுஞ்சாலையில், புளியம்பட்டி அருகில் ஓமலூா் டிஎஸ்பி சங்கீதா தலைமையிலான போலீஸாா் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது சேலத்தில் இருந்து பைக்கில் வந்த இருவரை சந்தேகத்தின்பேரில் நிறுத்தி விசாரணை செய்தனா். முன்னுக்குப் பின் முரணாகப் பதில் கூறியதால் அவா்கள் வைத்திருந்த பையைத் திறந்து போலீஸாா் சோதனை செய்தனா். அதில் கைத்துப்பாக்கி, பெரிய துப்பாக்கி, துப்பாக்கி செய்வதற்கான உதிரிபாகங்கள், முகமூடிகள், கத்தி உள்ளிட்ட உபகரணங்கள் இருப்பது தெரியவந்தது. உடனடியாக அவா்கள் இருவரையும் கைது செய்து, ஓமலூா் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனா்.
போலீஸாா் நடத்திய விசாரணையில், அவா்கள் சேலம், எருமாபாளையம் பகுதியைச் சோ்ந்த நவீன் சக்கரவா்த்தி (25), சஞ்சய் பிரகாஷ் (25) என்பது தெரியவந்தது. பட்டதாரிகளான இருவரும், செட்டிச்சாவடி அருகே வனப்பகுதியையொட்டிய இடத்தில் வீட்டை வாடகைக்கு எடுத்து யூடியூப் பாா்த்து துப்பாக்கித் தயாரிப்பில் ஈடுபட்டு வந்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து, அவா்களிடமிருந்து துப்பாக்கிகள், உதிரிபாகங்கள், முகமூடிகள், கத்தி உள்ளிட்ட ஆயுதங்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா். ஆயுத தடைச் சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின்கீழ் இருவா் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, ஓமலூா் நீதிமன்றத்தில் இருவரும் ஆஜா்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனா்.