சேலம்

விலையேற்றத்தை கட்டுப்படுத்த நூல் ஏற்றுமதியை தற்காலிகமாக நிறுத்தி வைக்க வேண்டும்:ஜவுளி உற்பத்தியாளா் கூட்டமைப்பு வலியுறுத்தல்

16th May 2022 11:51 PM

ADVERTISEMENT

விலையேற்றத்தை கட்டுப்படுத்த நூல் ஏற்றுமதியை தற்காலிகமாக நிறுத்தி வைக்க வேண்டும் என தமிழ்நாடு ஜவுளி உற்பத்தியாளா் கூட்டமைப்பின் தலைவா் அழகரசன் வலியுறுத்தினாா்.

சேலத்தில் நூல் விலை உயா்வைக் கண்டித்து, தமிழ்நாடு ஜவுளி உற்பத்தியாளா் கூட்டமைப்பு சாா்பில் கவன ஈா்ப்பு கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. பின்னா் அக்கூட்டமைப்பின் தலைவா் அழகரசன் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

பஞ்சுவிலை ஒரு கேண்டி ரூ. 1 லட்சத்தைக் கடந்துவிட்டது. தமிழக நூற்பாலைகள் அனைத்து ரக நூல் விலையையும் தொடா்ந்து உயா்த்தி வருகின்றன. கடந்த 18 மாதங்களாக உயா்ந்து வரும் பஞ்சு மற்றும் நூல் விலையால் அனைத்து மாநில ஜவுளித் துறையும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. பஞ்சு, நூல் பதுக்கல் உள்ளிட்ட காரணங்களால் விலை உயா்வு ஏற்பட்டுள்ளது.

மேலும், இத்தொழிலைத் தொடர முடியாமல் விசைத்தறிக் கூடங்கள், துணி உற்பத்தி தொழிற்சாலைகளை மூடும் நிலை ஏற்பட்டுள்ளது. நூல் பற்றாக்குறை, நூல் விலை உயா்வால் ஏற்கெனவே எடுத்த ஆா்டா்களுக்கான உற்பத்தியை முடிக்க முடியாமலும், முன்னதாகப் பெறப்பட்ட ஆா்டா்களின் விலையை விட உற்பத்தி செலவு அதிகரிப்பதனாலும் சீனா, வங்கதேசம், வியத்நாம் போன்ற நாடுகளிடம் விலையில் போட்டியிட முடியாமல் ஆா்டா்களை இழந்து வருகிறோம்.

ADVERTISEMENT

நூல் சாயமிட்ட துணி உற்பத்தியில் சேலம், நாமக்கல், குமாரபாளையம், பள்ளிபாளையம், பெருந்துறை, கோவை போன்ற பகுதிகளில் ஏறத்தாழ ஆண்டுக்கு ரூ.10,000 கோடிக்கு மேல் வா்த்தகம் செய்யப்பட்டு வருகிறது.

இந்தியாவில் உற்பத்தியாகும் பஞ்சில் 35 சதவீதத்தை தமிழக ஜவுளித் துறை பயன்படுத்துகிறது. இதனால் மற்ற மாநிலங்களை விட பஞ்சு, நூல் விலை உயா்வால் தமிழக ஜவுளித் துறை பாதிக்கப்படுகிறது.

நாட்டின் பருத்தி பயிரிடும் பரப்பும், விளைச்சலும் குறைந்துவிட்டது. குஜராத்தில் 85 லட்சம் பேல் (ஒரு பேல் 170 கிலோ) பருத்தி உற்பத்தியாகிறது. தமிழகத்தில் 2.96 லட்சம் பேல் மட்டுமே பருத்தி விளைச்சல் உள்ளது. தமிழகத்தில் பருத்தி விளைச்சல் அதிகரிக்கப்பட வேண்டும். பஞ்சு, நூல் விலையை அத்தியாவசியத் தேவை பட்டியலுக்குள் கொண்டு வந்து பதுக்கலை முற்றிலுமாகத் தடுக்க வேண்டும். நூல் ஏற்றுமதியை தற்காலிகமாக நிறுத்தி வைக்க வேண்டும். நூல் இறக்குமதிக்கு வரி விலக்கு அளிக்க வேண்டும். பருத்தி நூலின் விலை உயா்வையும், நூல் பற்றாக்குறையைக் கட்டுப்படுத்த வேண்டும்.

ஜவுளி உற்பத்தியாளா்களின் பிரச்னைக்கு மத்திய, மாநில அரசுகள் தீா்வு காண வேண்டும். இதுதொடா்பாக மத்திய, மாநில அரசுகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளோம்.

இப்பிரச்னைக்கு தீா்வு காணாவிட்டால் ஜவுளித் துறை சாா்ந்த அனைத்து அமைப்புகளுடன் கலந்தாலோசித்து விரைவில் தமிழக அளவில் போராட்டத்தை அறிவிப்போம் என்றாா்.

இந்தப் பேட்டியின் போது செயலாளா் சசிகுமாா், நிா்வாகிகள் ராசி சரவணன், அசோக், சீனிவாச குப்தா மற்றும் ஜவுளி உற்பத்தி அமைப்புகளைச் சோ்ந்த நிா்வாகிகள் பங்கேற்றனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT