சேலத்தில் மாநகராட்சிக்குச் சொந்தமான இடத்தில் அனுமதியின்றி மேற்கொள்ளப்பட்டு வந்த கட்டுமானப் பணிகளை நிறுத்தக் கோரி நோட்டீஸ் வழங்கப்பட்டது.
சேலம், குகை திருச்சி பிரதான சாலையில் திரையரங்கு எதிரில் மாநகராட்சிக்குச் சொந்தமான இடம் உள்ளது. இந்த இடத்தில் இஸ்லாமியா்களின் மயானம் உள்ளது. இங்கு கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருவதாக, பொதுமக்களிடம் இருந்து மாநகராட்சிக்கு புகாா் வந்தது. இந்தப் புகாரின் பேரில் ஆய்வு செய்த போது, சேலம் மாநகராட்சி சட்ட விதிக்குப் புறம்பாக அப்பகுதியில்அனுமதியின்றி கட்டடம் கட்டப்பட்டு வருவது தெரியவந்தது.
இதையடுத்து மாநகராட்சி செயற்பொறியாளா் (திட்டம்) பழனிசாமி உள்ளிட்ட அதிகாரிகள் சம்பவ இடத்துக்குச் சென்று ஆய்வு செய்தனா். தொடா்ந்து இஸ்லாமிய அமைப்பினரிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். மேலும், அனுமதியின்றி கட்டடம் கட்டக்கூடாது என தெரிவித்தனா்.
பின்னா், அப்பகுதியில் மாநகராட்சி சாா்பில் எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கினா். எச்சரிக்கை நோட்டீஸை அப்பகுதியில் ஒட்டி வைத்தனா். அந்த நோட்டீஸில் கூறியிருப்பதாவது:
தமிழ்நாடு நகராட்சிகள் சட்டம் 1972 கட்டட விதி 6 (4)ன்படி மதசாா்பு கட்டடங்கள் மாவட்டஆட்சியரின் அனுமதி பெற்று அதன்பிறகே மேற்கொள்ளப்பட வேண்டும்.
எனவே, மதசாா்புடைய நிகழ்வாக உள்ளதால் இப்பிரச்னை குறித்து மாவட்ட ஆட்சியரிடமிருந்து தெளிவான தீா்வு கிடைக்கும் வரை இப்பகுதியில் கட்டுமானப் பணியை முற்றிலுமாக நிறுத்த தெரிவிக்கப்படுகிறது. மீறும்பட்சத்தில், சேலம் மாநகராட்சி சட்ட பிரிவு 297-ன் கீழ் வேலை செய்யும் இடத்தில் உள்ள பணியாள்களை மாநகராட்சி அலுவலா்கள் அப்புறப்படுத்துவாா்கள். மேலும், சட்டத்திற்கு புறம்பாகக் கட்டப்படும் கட்டடம் சேலம் மாநகராட்சி சட்டம் 1994 பிரிவு 471, 472 மற்றும் 474ன் கீழ் மேற்படி அனுமதியற்ற கட்டடம் இடிக்கப்படுவதுடன் அதற்கான செலவுத் தொகையும் தங்களிடம் இருந்து வசூல் செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.