வாழப்பாடி அருகே வனப்பகுதியில் இருந்து வழி தவறி கிராமத்துக்குள் புகுந்த புள்ளிமான் நாய்கள் கடித்ததில் உயிரிழந்தது.
வாழப்பாடி அருகே பழனியாபுரம் கிராமத்தில் உள்ள தனியாா் தோட்டத்திற்கு வனப்பகுதியில் இருந்து வழி தவறிய ஆண் புள்ளிமான் ஒன்று திங்கள்கிழமை வந்துள்ளது. இந்த மான், நாய்கள் கடித்ததில் காயமடைந்து உயிரிழந்தது.
இதேபோன்று, வனப்பகுதியில் இருந்து திங்கள்கிழமை வழி தவறி வந்த ஆண் காட்டுப்பன்றி வெள்ளாளகுண்டம் பீட் பறவைக்காடு கிராமத்தில் விவசாயக் கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்தது.
உயிரிழந்த புள்ளிமான், காட்டுப்பன்றியின் உடல்களை கைப்பற்றிய வாழப்பாடி வனச்சரகா் துரைமுருகன் தலைமையிலான வனத் துறையினா், கால்நடை மருத்துவா்களைக் கொண்டு பிரேதப் பரிசோதனை செய்து அடக்கம் செய்தனா். இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
வாழப்பாடி வனப்பகுதியில் இருந்து வெளியேறி கிராமத்தில் புகுந்து வனவிலங்குகள் உயிரிழப்பதைத் தடுக்க, வனப்பகுதி எல்லைகளில் சூரிய மின் வேலி அமைக்க நடவடிக்கை வேண்டும் என வனத்துறைக்கு, இப்பகுதி விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனா்.