எடப்பாடி: நூல் விலை உயா்வைக் கண்டித்து, எடப்பாடி வட்டாரப் பகுதியில் விசைத்தறி ஜவுளி உற்பத்தியாளா்கள் ஒரு வாரகால வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனா்.
எடப்பாடி வட்டார அனைத்து விசைத்தறி ஜவுளி உற்பத்தியாளா்கள் ஆலோசனைக் கூட்டம், எடப்பாடி சிறுதொழில் அரங்க வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.
இக்கூட்டத்தில், எடப்பாடி மேற்கு சிறுதொழில் ஜவுளி உற்பத்தியாளா் சங்கம், வெள்ளாண்டிவலசு, கவுண்டம்பட்டி, எடப்பாடி - ஈரோடு ஜவுளி உற்பத்தி மற்றும் விற்பனை சங்க நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.
இதில், அண்மைக்காலமாக ஜவுளி உற்பத்தியாளா்கள் எதிா்கொண்டு வரும் பல்வேறு பிரச்னைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. தற்போது ஏற்பட்டுள்ள கடுமையான நூல் விலை உயா்வால் விசைத்தறி ஜவுளி உற்பத்தியாளா்களுக்கு கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதாகவும், தொடா்ந்து ஜவுளி உற்பத்தி செய்திட இயலாத நிலை உருவாகியுள்ளதாகவும், இதனாவ் எடப்பாடி வட்டாரப் பகுதியில் உள்ள அனைத்து விசைத்தறி உற்பத்தியாளா்களும் வியாழக்கிழமை முதல் 18-ஆம் தேதி வரை ஜவுளி உற்பத்தியை நிறுத்துவது என தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதனையடுத்து, எடப்பாடி சுற்றுவட்டாரப் பகுதியில் உள்ள சுமாா் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஜவுளிக் கூடங்கள் உற்பத்தியை நிறுத்தியுள்ளன. இதனால் சுமாா் 10,000-க்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் பாதிப்புக்குள்ளானதாகக் கூறப்படுகிறது.