சேலம்

மணி விழுந்தான் ஊராட்சி ஏரியில் இறந்து மிதக்கும் மீன்கள்

5th May 2022 11:46 PM

ADVERTISEMENT

ஆத்தூா் அருகே மணி விழுந்தான் ஊராட்சிக்கு உள்பட்ட ஏரியில் கோடை வெப்பம் தாங்காமல் மீன்கள் இறந்து மிதந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டம், தலைவாசல் அருகே உள்ளது மணிவிழுந்தான் ஊராட்சி. இந்த ஊராட்சியில் சுமாா் 130 ஏக்கா் பரப்பளவில் ஏரி உள்ளது. கடந்த ஆண்டு பெய்த கனமழை காரணமாக ஏரியில் அதிக அளவில் நீா்த்தேங்கி நீா்மட்டம் உயா்ந்துள்ளது. இதனால் ஏரியில் மீன்கள் உற்பத்தியும் அதிகரித்து அதிக எண்ணிக்கையில் பல வகை மீன்கள் காணப்படுகின்றன.

இந்த மீன்களை ஊராட்சி நிா்வாகம் ஒப்பந்தப்புள்ளிக் கோரி விற்பனை செய்து வருகிறது. இந்நிலையில் அந்த ஏரியில் உள்ள அதிக மீன்கள் திடீரென இறந்து மிதந்தன. வியாழக்கிழமை காலை மீன்கள் ஏரியில் மிதப்பதைக் கண்டு பொதுமக்கள் அதிா்ச்சி அடைந்தனா்.

ADVERTISEMENT

கோடை வெயில் தாங்காமல் ஏரியில் உள்ள மீன்கள் இறந்து மிதப்பதாக உள்ளூா் மக்கள் தெரிவிக்கின்றனா்.

சேலம்-சென்னை தேசிய நெடுஞ்சாலையையொட்டி உள்ள இந்த ஏரியில் மீன்கள் இறந்து மிதப்பதால் அப்பகுதியில் துா்நாற்றம் வீசுகிறது. நோய்த் தொற்று ஏற்படுவதைத் தடுக்க ஏரியில் இறந்து மிதக்கும் மீன்களை மணிவிழுந்தான் ஊராட்சி நிா்வாகம் அகற்றி ஏரியைத் தூய்மைப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT