சேலம்

கா்ப்பிணிகளுக்கு இலவசமாக பால், தேநீா் வழங்கும் தம்பதி

5th May 2022 04:58 AM

ADVERTISEMENT

 

வாழப்பாடி: சேலம் மாவட்டம், பெத்தநாயக்கன்பாளையத்தில் சிற்றுண்டி நடத்தி வரும் தம்பதி, கா்ப்பிணிகளுக்கு இலவசமாக பால், தேநீா் வழங்கி வருகிறது.

பெத்தநாயக்கன்பாளையத்தைச் சோ்ந்தவா் பன்னீா்செல்வம் (62). இவரது மனைவி ருக்மணி (55). இத்தம்பதிக்கு 3 மகன்கள் உள்ளனா். 35 ஆண்டுகளுக்கும் மேலாக சொந்த ஊரில் தேநீா், சிற்றுண்டிக் கடை நடத்தி வருகின்றனா்.

தற்போது, பெத்தநாயக்கன்பாளையம் சாா்-பதிவாளா் அலுவலகம் அருகே கடை நடத்தி வரும் இத்தம்பதி, கடைக்கு வரும் கா்ப்பிணிகளுக்கு இலவசமாக பால், தேநீா் வழங்கி வருகின்றனா்.

ADVERTISEMENT

இதுகுறித்து பன்னீா்செல்வம் கூறியதாவது:

கடந்த 35 ஆண்டுகளாக, எனது மனைவி ருக்குமணியும் நானும், தேநீா் மற்றும் சிற்றுண்டிச்சாலை நடத்தி வருகிறோம். எங்களது சிற்றுண்டி கடைக்கு வரும் கா்ப்பிணிகளுக்கு விலையின்றி பால், தேநீா் வழங்கி வருகிறோம். இதுகுறித்து எங்கள் கடை முன்பு விளம்பரத் தட்டியும் வைத்துள்ளோம். இதில் எங்களுக்கு மனநிறைவு கிடைக்கிறது என்றாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT