வாழப்பாடியில் மின்சார ரயில்பாதையைக் கடக்க நடைபாதை மேம்பாலம் அமைக்க வேண்டுமென சேலம் கோட்ட ரயில்வே நிா்வாகத்துக்கு இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
சேலம் சந்திப்பு - விருதாச்சலம் மாா்க்கத்தில், சேலத்தில் இருந்து 30-ஆவது கி.மீ. தொலைவில் வாழப்பாடி ரயில் நிறுத்தம் அமைந்துள்ளது. இந்த வழித்தடத்தில், சேலம் - விருதாச்சலம் பயணிகள் ரயில், சேலம் - சென்னை எழும்பூா் விரைவு ரயில், வாரந்திர சிறப்பு விரைவு ரயில்களும் இயக்கப்படுகின்றன. இந்த வழித்தடம் அண்மையில் மின் பாதையாக மாற்றப்பட்டதால், சரக்கு ரயில்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
இந்த வழித்தடத்தில் அடிக்கடி ரயில்கள் வந்து செல்வதால், வாழப்பாடி பேரூராட்சி குடியிருப்புப் பகுதியில் அமைந்துள்ள ரயில்பாதையை மக்கள் கடந்து செல்வதைத் தடுக்க, சிமென்ட் கான்கிரீட் தடுப்புச்சுவா் வைத்து அடைக்கப்பட்டுள்ளது. இதனால், வாழப்பாடி அக்ரஹாரம், குமரவடிவேல் தெரு, அய்யாவுக்கவுண்டா் தெரு, பழனிபண்டாரம் தெரு, காளியம்மன் நகா், மசூதி தெரு, காசிப்படையாச்சி தோட்டம் உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த மக்கள் 2 கி.மீ. தொலைவு சுற்றிக்கொண்டு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், பயணிகளும், பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.
எனவே, மின்சார ரயில்பாதையைக் கடக்க நடைபாதை மேம்பாலம் அமைக்க வேண்டுமென, சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகத்துக்கு இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.