எடப்பாடியை அடுத்துள்ள கொங்கணாபுரம் பகுதியில் செயல்பட்டு வரும் வேளாண் கூட்டுறவு விற்பனை சங்கத்தில், சனிக்கிழமை நடைபெற்ற பொது ஏலத்தில் ரூ. 70 லட்சம் மதிப்பிலான பருத்தி விற்பனையானது.
சனிக்கிழமைதோறும் இம்மையத்தில் பருத்தி, நிலக்கடலை, எள், உலா்ந்த தேங்காய் பருப்பு உள்ளிட்ட விவசாய விளைபொருள்கள் பொது ஏலம் மூலம் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.
நிகழ் வாரத்தில் விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வந்திருந்த சுமாா் 2,000 பருத்தி மூட்டைகள் 500 லாட்டுகளாகப் பிரிக்கப்பட்டு கூட்டுறவு துறை அலுவலா்கள் முன்னிலையில் பொது ஏலம் விடப்பட்டது. இதில், பி.டி. ரக பருத்தியானது குவிண்டால் ஒன்று ரூ. 8,600முதல் ரூ. 12,669 வரையிலும், டி.சி.ஹெச். ரக பருத்தியானது குவிண்டால் ஒன்று ரூ. 9,500 முதல் ரூ. 12,169 வரையிலும் விலைபோனது. சனிக்கிழமை நாள் முழுவதும் நடைபெற்ற ஏலத்தில் ரூ. 70 லட்சம் மதிப்பிலான பருத்தி வா்த்தகம் நடைபெற்றது.