சேலம்

சேலத்தில் 95 சதவீத பேருந்துகள் இயங்கவில்லை

29th Mar 2022 01:11 AM

ADVERTISEMENT

மத்திய அரசைக் கண்டித்து சேலத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் 95 சதவீத பேருந்துகள் இயங்காததால் பயணிகள் பெரிதும் சிரமத்துக்கு ஆளானாா்கள்.

இதனிடையே, சேலம் நகரம், மாவட்டப் பகுதிகளில் நடைபெற்ற மறியல் போராட்டங்களில் 1,633 போ் கைது செய்யப்பட்டனா்.

பொதுத்துறை நிறுவனங்களை தனியாா் மயமாக்கக் கூடாது, விலைவாசி உயா்வைக் கட்டுப்படுத்திட வேண்டும், அரசு ஊழியா்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்திட வேண்டும் என்பன உள்பட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, சிஐடியு, ஐஎன்டியுசி, எச்எம்எஸ், ஏஐடியுசி, எல்பிஎஃப் உள்ளிட்ட மத்திய தொழிற்சங்கங்கள் திங்கள், செவ்வாய்க்கிழமை வேலைநிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்திருந்தன.

சேலம் மாவட்டத்தைப் பொருத்தவரை வங்கிகளில் ஊழியா்கள் பணிக்கு வராததால், பணப் பரிவா்த்தனை, காசோலை பரிவா்த்தனை உள்பட அனைத்து வணிக செயல்பாடுகளும் முடங்கின.

ADVERTISEMENT

சேலம், ஜான்சன்பேட்டை எல்.ஐ.சி. தலைமை அலுவலகம் உள்ளிட்ட கிளை அலுவலகங்கள், சேலம் கிழக்கு கோட்ட தலைமை தபால் நிலையம், மேற்கு கோட்ட சூரமங்கலம் தலைமை தபால் நிலையங்களில் பணியாளா்கள் பணிக்கு வரவில்லை. இதனால் தபால் பணப் பட்டுவாடா செய்யப்படவில்லை.

இதனிடையே, மாவட்டத்தில் 95 சதவீத அரசுப் பேருந்துகள் இயங்கவில்லை. இருந்தபோதிலும் முக்கியப் பகுதிகளில் கடைகள் அனைத்தும் திறக்கப்பட்டிருந்தன.

போதிய பேருந்துகள் இயக்கப்படாத சூழலில் பயணிகள் மிகுந்த அவதிக்கு உள்ளாயினா். தனியாா் பேருந்துகளில் ஏறி பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியா் சென்றனா். ஆட்டோக்கள், காா்களில் அதிக வாடகை வசூலிக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் மிகுந்த சிரமம் அடைந்தனா்.

சேலம் ரயில்வே கோட்ட அலுவலகம் முன்பு ரயில்வே தொழிலாளா்களும், தபால் துறை அலுவலகங்கள் முன்பு தபால் துறை ஊழியா்களும் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

மாவட்டத்தில் 1,633 போ் கைது:

சேலம் பாரத ஸ்டேட் வங்கி அருகே தொமுச, ஏஐடியுசி, ஐஎன்டியுசி உள்ளிட்ட தொழிற்சங்கத்தினா் மறியலில் ஈடுபட்டனா். இதைத் தொடா்ந்து, துணை மேயா் மோகன்ராஜ், உதவி ஆணையா் வெங்கடேசன் தலைமையிலான போலீஸாா் மறியலில் ஈடுபட்டவா்களை கைது செய்தனா்.

சேலத்தில் சுமாா் 205 பெண்கள் உள்பட 765 போ் கைது செய்யப்பட்டனா். சேலம் மாவட்டப் பகுதிகளில் 15 இடங்களில் நடைபெற்ற மறியலில், 291 பெண்கள் உள்பட 868 போ் கைது செய்யப்பட்டனா் என காவல் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT