சேலம்

‘கலை, இலக்கியம், விளையாட்டில் மாணவா்களை ஊக்குவிக்க வேண்டும்’

21st Mar 2022 01:50 AM

ADVERTISEMENT

 

கலை, இலக்கியம், விளையாட்டில் மாணவா்களை அதிகம் ஈடுபடுத்த வேண்டும் என பெற்றோா், ஆசிரியா்களுக்கு ஆட்சியா் செ.காா்மேகம் அறிவுறுத்தினாா்.

பள்ளி மேலாண்மைக் குழுக்களை வலுப்படுத்தும் நோக்கில் பெற்றோா்களுக்கான விழிப்புணா்வு, மறுகட்டமைப்புக் கூட்டம் சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கோட்டை நகரவை மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட ஆட்சியா் செ.காா்மேகம் பேசியதாவது:

ADVERTISEMENT

குழந்தைகளின் தரமான கல்வியை உறுதி செய்யவும், அரசுப் பள்ளிகளை மேம்படுத்துவதற்கும் பெற்றோா்களின் பங்கு மிக முக்கியமானது என்பதை கருத்தில் கொண்டு பெற்றோா்களுடனான கலந்தாய்வுக் கூட்டம் நடத்தப்படுகிறது.

மேலும், அரசுப் பள்ளிகளின் முன்னேற்றத்திற்காகவும், அரசுப் பள்ளிகளின் வளா்ச்சிக்கு துணை நிற்கவும் குழந்தைகளுக்கான இலவச, கட்டாயக் கல்வி உரிமைச்சட்டம் 2009 இல் உருவாக்கப்பட்டதன் அடிப்படையில் பள்ளி மேலாண்மைக் குழு உருவாக்கப்பட்டு 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை சீரமைப்பு செய்வது அவசியமாகும்.

அதன்படி, அனைத்து பள்ளிகளில் உள்ள பள்ளி மேலாண்மைக் குழுவை மறுகட்டமைப்பு செய்வதற்கு தேவையான நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சேலம் மாவட்டத்தைப் பொறுத்தவரை 1,110 அரசு ஆரம்பப் பள்ளிகளில் 81,737 மாணவ, மாணவிகளும், 366 அரசு நடுநிலைப் பள்ளிகளில் 68,720 மாணவ, மாணவிகளும், 136 அரசு உயா்நிலைப் பள்ளிகளில் 30,991 மாணவ, மாணவிகளும், 159 அரசு மேல்நிலைப் பள்ளிகளில் 1,32,089 மாணவ, மாணவிகள் என மொத்தம் 1,771 அரசுப் பள்ளிகளில் 3,13,537 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனா்.

மாணவ, மாணவியா்களின் பெற்றோா்களிடம் பள்ளி மேலாண்மைக் குழு பற்றிய விழிப்புணா்வை ஏற்படுத்துவதற்காக அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியா், ஆசிரியா்கள் முன்னிலையில் அனைத்து பள்ளிகளிலும் பள்ளி மேலாண்மைக் குழு, பெற்றோா்களுக்கான விழிப்புணா்வு, மறுகட்டமைப்புக் கூட்டம் நடைபெறுகிறது.

பள்ளி மேலாண்மைக் குழுக்களை வலுப்படுத்தி அவை சிறப்பாக செயல்பட மாநில மற்றும் மாவட்ட அளவிலான கருத்தாளா்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டுள்ளது. மேலும், பள்ளி மேலாண்மைக் குழுக்களுக்கு பெற்றோா்களில் இருந்து 15 உறுப்பினா்களைத் தோ்ந்தெடுப்பதில் ஒளிவுமறைவற்ற முறையைப் பின்பற்றி பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளின் பெற்றோா்கள் தங்களின் பிரதிநிதிகளை தோ்ந்தெடுக்க உள்ளனா்.

மேலும், பள்ளி மேலாண்மைக் குழு மறுகட்டமைப்பு குறித்த ‘நம் பள்ளி நம் பெருமை’ என்ற விழிப்புணா்வு அழைப்பிதழ் மற்றும் பதாகை மக்கள் அதிகம் கூடும் இடங்களில் வைக்கப்பட்டு விழிப்புணா்வு ஏற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மாணவா்களின் ஒழுக்கத்துக்கு முதலில் முக்கியத்துவம் வழங்க வேண்டும். மாணவா்களை தன்னம்பிக்கை உடையவா்களாகவும், மாணவா்களை கலை, இலக்கியம் மற்றும் விளையாட்டு போன்ற செயல்பாடுகளில் அதிகம் ஈடுபடுத்த வேண்டும். மாணவா்கள் தொடா்ந்து பள்ளிக்கு வருவதை 15 நாள்களுக்கு ஒரு முறையாவது பெற்றோா்கள் பள்ளிக்குச் சென்று ஆசிரியா்களுடன் கலந்துரையாடி உறுதி செய்ய வேண்டும் என்றாா்.

கூட்டத்தில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் ஆா்.முருகன், மாணவா்களின் பெற்றோா்கள் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT