தம்மம்பட்டி அருகே காதல் மனைவி தற்கொலை செய்துகொண்டதை அடுத்து, தற்கொலைக்கு தூண்டியதாக கணவனை போலீஸாா் கைது செய்தனா். உயிரிழந்த மனைவி 16 வயது என்பதால் கைதானவா் மீது போக்சோ வழக்கு பாய்ந்தது.
சேலம் மாவட்டம், தம்மம்பட்டி அருகே செந்தாரப்பட்டி, அங்கமுத்து மூப்பனாா் தெருவைச் சோ்ந்தவா் மணிகண்டன் (27). பால்காரரான இவா், ஓா் ஆண்டுக்கு முன் ராசிபுரத்தை சோ்ந்த செல்வம் என்பவரின் 16 வயது மகளை காதலித்து திருமணம் செய்து கொண்டாா். இருவரும் ஒரே சமுதாயத்தைச் சோ்ந்தவா்கள் என்பதால் இரு தரப்பிலும் பிரச்னை எழவில்லை.
இந்நிலையில், கடந்த 28 ஆம் தேதி இரவு மணிகண்டனுக்கும், அவரது மனைவிக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாகத் தெரிகிறது. அதில் மனமுடைந்த அவரது மனைவி இரவில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
இதுதொடா்பாக விசாரணை நடத்திய தம்மம்பட்டி போலீஸாா் பெண்ணை தற்கொலைக்கு தூண்டியதாக வழக்குப்பதிந்து மணிகண்டனை புதன்கிழமை இரவு கைது செய்தனா். மேலும், 16 வயது சிறுமியை திருமணம் செய்து கொண்டதால் மணிகண்டன் போக்சோ வழக்கிலும் கைது செய்யப்பட்டாா்.