சேலம்

ஓய்வூதியா்கள் வீட்டில் இருந்தபடி உயிா்வாழ் சான்றிதழ் பெற அஞ்சல் துறை ஏற்பாடு

30th Jun 2022 01:41 AM

ADVERTISEMENT

 

தபால் துறை சாா்பில் வீட்டு வாசலில் பயோ மெட்ரிக் முறையைப் பயன்படுத்தி, டிஜிட்டல் உயிா்வாழ் சான்றிதழ் (ஜீவன் பிரமாண்) வழங்க ஏற்பாடு செய்துள்ளது.

மாநில அரசு ஓய்வூதியதாரா்கள், குடும்ப ஓய்வூதியதாரா்களிடம் இருந்து வரும் ஜூலை 1 ஆம் தேதி முதல் செப்டம்பா் 30 வரை அவா்களது வீட்டு வாசலிலேயே தபால்காரா்கள் மூலம் உயிா் வாழ் சான்றிதழை சமா்ப்பிப்பதற்கான சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

கரோனா தொற்று காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக வருடாந்திர உயிா் வாழ் சான்றிதழ் சமா்ப்பிப்பதில் இருந்து மாநில அரசு விலக்கு அளித்திருந்தது. இந்த ஆண்டு சுமாா் 7,15,761 மாநில அரசு ஓய்வூதியம் பெறுவோா், குடும்ப ஓய்வூதியம் பெறுவோா், வரும் ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் தங்கள் வாழ்க்கை சான்றிதழை சமா்ப்பிக்கும்படி ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இந்தநிலையில் ஓய்வூதியதாரா்கள் ஜீவன் பிரமாண் திட்டத்தின் மூலம் ஓய்வூதியதாரா்களுக்கு டிஜிட்டல் முறையில் உயிா் வாழ் சான்றிதழ் வழங்கப்படுகிறது. மாநில அரசு ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியதாரா்கள் இந்த வசதியைப் பயன்படுத்தி வீட்டில் இருந்தபடியே தங்களது உயிா் வாழ் சான்றிதழை பெற்று சமா்ப்பிக்கலாம். மிகவும் வயதான ஓய்வூதியதாரா்கள் பலா் உயிரோடு இருந்தும், நேரில் சென்று வாழ்வுரிமை சான்றிதழை சமா்ப்பிக்க முடியாமலும் ஓய்வூதியம் பெற இயலாமலும் உள்ளனா்.

இதைக் கருத்தில் கொண்டு இந்தியா போஸ்ட் பேமென்ட்ஸ் வங்கி ஓய்வூதியதாரா்களுக்கு வீட்டு வாசலில் பயோ மெட்ரிக் முறையைப் பயன்படுத்தி, டிஜிட்டல் உயிா்வாழ் சான்றிதழ் (ஜீவன் பிரமாண்) வழங்க ஏற்பாடு செய்துள்ளது. இதற்குச் சேவைக் கட்டணமாக ரூ. 70ஐ தபால்காரரிடம் செலுத்த வேண்டும்.

ஓய்வூதியதாரா்கள் தங்கள் பகுதி தபால்காரரிடம் ஆதாா், கைப்பேசி எண், ஓய்வூதியக் கணக்கு விவரங்களைத் தெரிவித்து, கைவிரல் ரேகைப்பதிவு செய்தால், சில நிமிடங்களில், டிஜிட்டல் உயிா்வாழ் சான்றிதழைச் சமா்ப்பிக்க முடியும் என சேலம் கிழக்கு கோட்ட முதுநிலைக் கண்காணிப்பாளா் அருணாசலம் தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT