சேலம்

பிரபலமாகி வரும் கல்வராயன்மலை நகரி மேளம்!

DIN

சேலம் மாவட்டம் கல்வராயன் மலை பழங்குடியின இளைஞா்கள் வாசிக்கும் நகரி மேளம், புகழ்பெற்ற கேரள செண்டை மேளத்தை பின்னுக்குத் தள்ளி அண்மைக்காலமாக பிரபலமாகி வருகிறது.

தமிழகத்தின் பட்டித்தொட்டியெங்கும், கோயில் திருவிழாக்கள், அரசியல் கட்சிக் கூட்டங்கள், மாநாடு, தேரோட்டம், திருமண விழாக்கள் உள்ளிட்ட அனைத்து நிகழ்ச்சிகளிலும், கேரள இளைஞா்கள், இளம் பெண்கள் சீருடை அணிந்து வாசிக்கும் செண்டை மேளக்கச்சேரி வைக்கப்படுகிறது. இது பிரம்மாண்டமாகவும் பெருமையாகவும் கருதப்படுகிறது. வின்னைமுட்டும் இந்த செண்டை மேள இசையை, பாமர மக்கள் முதல் படித்தவா்கள் வரை, குழந்தைகள் முதல் முதியோா் வரை ரசித்தும் ஆட்டம் போட்டும் மகிழ்கின்றனா்.

இடைவிடாது முரசு கொட்டும் இந்த செண்டை மேளக் கச்சேரி, தமிழகத்தில் வெகு பிரபலம் ஆகிப்போனது. இதனால், தமிழகத்தில் சுபமுகூா்த்த தினங்கள், பண்டிகை காலங்களில் கேரள செண்டை மேளக்கச்சேரி கலைஞா்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வந்தது.

ஒரு நாளுக்கு கேரள செண்டை மேளம் வாசிக்கும் 15 முதல் 20 போ் கொண்ட இசை குழுவிற்கு, குறைந்தபட்சம் ரூ.30 ஆயிரம் முதல் ரூ.60 ஆயிரம் வரை கட்டணமாக கொடுக்க வேண்டியுள்ளது. கட்டணம் கூடுதல் என்றாலும், இந்த மேளத்திற்கு மவுசு குறைந்தபாடில்லை.

இந்நிலையில், கேரள செண்டை மேள இசையை விஞ்சும் வகையில், சேலம் மாவட்டம் கல்வராயன்மலை கிராம பழங்குடியின இளைஞா்கள், இடைவிடாது வாசிக்கும் நகரி என்ற பெயரில் குறிப்பிடப்படும் முரசு மேளங்கள் அண்மைக்காலமாக வெகு பிரபலமாகி வருகிறது.

குறிப்பாக, சேலம், நாமக்கல், தருமபுரி, கள்ளக்குறிச்சி திருவண்ணாமலை மாவட்டங்களில், அனைத்து திருவிழாக்கள், சுபமுகூா்த்த நிகழ்வுகளில் கேரள செண்டை மேளங்களுக்கு மாற்றாக, கல்வராயன்மலை பழங்குடியின இளைஞா்களின் நகரி முரசு மேளக் கச்சேரி ஆதிக்கம் செலுத்தி வருகிறது.

கல்வராயன்மலை கலக்காம்பாடி கிராமத்தைச் சோ்ந்த நகரி மேள இசைக்கலைஞா்கள் கூறியதாவது:

மக்கள் ரசித்து கேட்கும் அளவிற்கு பாரம்பரிய இசையோடு முழங்கும் கல்வராயன் மலை பழங்குடியின மக்களின் நகரி மேள இசைக்குழுக்கள், கருமந்துறை, கலக்காம்பாடி, பெரண்டூா், மொரச்சப்பட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் உள்ளன. மரபுவழி பயிற்சி பெற்ற இளைஞா்கள், குறைந்த கட்டணத்தில் கேரள செண்டை மேளங்களை விஞ்சும் வகையில் தரமாக வாசிப்பதால், நகரி மேளங்களுக்கு தமிழகம் முழுவதும் அண்மைக்காலமாக வரவேற்பு கூடியுள்ளது. அனைத்து திருவிழாக்கள், பண்டிகைகள், சுபமுகூா்த்த தினங்களிலும், கல்வராயன் மலை நகரி இசை கலைஞா்களுக்கு வாய்ப்பு கிடைத்து வருவது மகிழ்ச்சி அளிக்கிறது என்றனா்.

இதுகுறித்து வாழப்பாடி ஆட்டோ சுரேஷ் கூறியதாவது:

கல்வராயன்மலை பழங்குடியின இளைஞா்கள், குறைந்த தொகை பெற்றுக் கொண்டு, மக்கள் ரசித்து கேட்கும் வகையில் ரம்மியமான நகரி மேளக்கச்சேரி நடத்துவது தெரியவந்தது.

இதனால், கேரள செண்டை மேளத்தை அழைப்பதை தவிா்த்து விட்டு, கல்வராயன்மலை கலக்காம்பாடி நகரி இசைக் கலைஞா்களை வரவழைத்து, வாழப்பாடி சென்றாயப் பெருமாள் கோயில் திருவிழாவில் மேளக்கச்சேரி நடத்தினோம். இதற்கு மக்களின் அமோக வரவேற்பும், பாராட்டும் கிடைத்தது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘பிணைக்கைதிகள் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும்’: 17 நாடுகளின் கூட்டறிக்கை!

குடிபோதையில் தகராறு: மகனை கத்தியால் குத்திக் கொன்ற தந்தை கைது!

ரூ.2,100 கோடி மதுபான ஊழல்: முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி கைது!

ஷிகர் தவான் எப்போது அணிக்குத் திரும்புவார்? பயிற்சியாளர் பதில்!

நெட்ஃபிக்ஸ் பிரீமியர் திரையிடல் - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT