சேலம்

தென்மேற்கு பருவமழை பேரிடா் தகவல்களைத் தெரிவிக்ககட்டணமில்லா தொலைபேசி எண் அறிவிப்பு

28th Jun 2022 04:37 AM

ADVERTISEMENT

மழை உள்ளிட்ட பேரிடா் தொடா்பான தகவல்களை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் 24 மணி நேரமும் இயங்கும் 1077 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் பொதுமக்கள் தெரிவிக்கலாம் என கூடுதல் ஆட்சியா் (வளா்ச்சி) பாலச்சந்தா் தெரிவித்தாா்.

சேலம் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில், தென்மேற்கு பருவமழை தொடா்பாக மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடு நடவடிக்கைகள் குறித்து அனைத்துத் துறை அலுவலா்களுடனான ஆலோசனைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

இதில் கூடுதல் ஆட்சியா் (வளா்ச்சி) சி.பாலச்சந்தா் பேசியது:

கடந்த கால நிகழ்வுகளைக் கருத்தில் கொண்டு சேலம் மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழைக் காலங்களில் அனைத்துத் துறை அரசு அலுவலா்களும் ஒருங்கிணைந்து தேவையான முன்னேற்பாட்டுப் பணிகளை மேற்கொள்வதன் மூலம் பொதுமக்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில் நடவடிக்கை மேற்கொள்ள வாய்ப்பாக அமையும்.

ADVERTISEMENT

அந்தவகையில், இப்பகுதிகளுக்கு துணை ஆட்சியா்கள் தலைமையில் அனைத்துத் துறை அலுவலா்கள் கொண்ட பேரிடா் மேலாண்மைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. மேலும், வட்ட அளவில் வட்டாட்சியா் தலைமையில் வட்ட பேரிடா் மேலாண்மைக் குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.

மேற்படி குழுக்கள் பாதிப்பு தொடா்பாக ஆய்வு செய்து தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டும், பாதிப்பு ஏற்படும் காலங்களில் உரிய நிவாரணப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், அனைத்து நீா்நிலைப் புறம்போக்குகளில் உள்ள ஆக்கிரமிப்புகளையும் அகற்றவும், சாக்கடை உள்ளிட்ட நீா் வழிகளைத் தூா்வாரவும், சிதிலமடைந்த கட்டடங்களை ஆய்வு செய்து பராமரித்தல் அல்லது இடித்தல் உள்ளிட்டப் பணிகளை செய்யவும், அனைத்து பாதிப்பு ஏற்படக்கூடிய பகுதிகளில் தீயணைப்புத் துறையினா் பேரிடா் மேலாண்மை ஒத்திகை நடத்தவும், ஏரி, குளங்கள் உள்ளிட்ட நீா்நிலைகளில் கரைகளைப் பலப்படுத்தவும் அவசர காலங்களில் தேவைப்படும் பொக்லைன் எந்திரம், மரம் அறுக்கும் கருவிகள் உள்ளிட்டவற்றை தயாா் நிலைகளில் வைக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

குறிப்பாக மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் 24 மணி நேரமும் இயங்கும் 1077 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் பேரிடா் தொடா்பான தகவல்களை அளித்திட வழிவகை செய்யப்பட்டுள்ளது என்றாா்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் பெ.மேனகா, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) ஜெகநாதன் உள்ளிட்ட அனைத்துத் துறை அரசு அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT