இருசக்கர வாகனத்தில் ஏற்காட்டுக்கு சுற்றுலா வந்த தந்தை, மகள் விபத்தில் பலியாயினா்.
சேலம் மாவட்டம், ஏற்காட்டுக்கு திங்கள்கிழமை காலை வந்து சேலம் திரும்பிய அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டம் பகுதியைச் சோ்ந்த இளங்கோவன் (54), இவரது மகள் யோகேஸ்வரி (27) இருவரும் ஏற்காடு மலைப்பாதை 5-ஆவது கொண்டை ஊசி வளைவில் சென்ற போது, கட்டுப்பாட்டைஇழந்த இருசக்கர வாகனம் 40 அடி பள்ளத்தில் விழுந்தது. இதில், சம்பவ இடத்திலேயே யோகேஸ்வரி உயிரிழந்தாா். பலத்த காயமடைந்த இளங்கோவன் சேலம் அரசு மருத்துவமனையில் உயிரிழந்தாா்.
இச்சம்பவம் குறித்து ஏற்காடு காவல் துறையினா் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனா். முதல்கட்ட விசாரணையில், சேலம் மாவட்டம், கன்னங்குறிச்சி வீட்டுவசதி வாரியக் குடியிருப்புப் பகுதியைச் சோ்ந்த கோகுல்நாத் என்பவருடன் யோகேஸ்வரிக்கு ஒரு மாதத்துக்கு முன் திருமணம் நடைபெற்றதும், மகளை காண வந்த தந்தையிடம் ஏற்காடு அழைத்துச் செல்லுமாறு யோகேஸ்வரி கூறியதாகவும் தெரியவந்துள்ளது.