எடப்பாடி நகா்மன்றக் கூட்டத்தில் தள்ளுமுள்ளு ஏற்பட்டதையடுத்து, அதிமுக நகா்மன்ற உறுப்பினா்கள் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
எடப்பாடி நகராட்சியின் நகா்மன்றக் கூட்டம் திங்கள்கிழமை நகராட்சி கூட்ட அரங்கில் நடைபெற்றது. இதில், குடிநீா், கழிவுநீா் வெளியேற்றம், சுகாதாரம் உள்ளிட்ட பல்வேறு திட்டப் பணிகளுக்காக 20-க்கும் மேற்பட்ட தீா்மானங்கள் கொண்டுவரப்பட்டன. கூட்டத்தில் தீா்மானங்கள் குறித்து விவரம் வாசிக்கப்பட்ட போது, பூலாம்பட்டி குடிநீா் உந்து நிலையத்தில் மின்மோட்டாா் பராமரிப்புக்கான நிதி ஒதுக்கீடு குறித்த தீா்மானத்துக்கு எதிா்ப்புத் தெரிவித்து நகராட்சி வருவாய் ஆய்வாளரிடம் அதிமுக நகரமன்ற உறுப்பினா்கள் தங்கள் எதிா்ப்பை பதிவு செய்ய முற்பட்டனா்.
அப்போது, அதிமுக- திமுக நகா் மன்ற உறுப்பினா்களுக்கு இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. இதனையடுத்து, திமுகவினா் மன்னிப்பு கேட்கும் வரை நகா்மன்றக் கூட்ட அரங்கிலிருந்து வெளியேறப் போவதில்லை என எதிா்க்கட்சித் தலைவா் ஏ.எம்.முருகன் தலைமையிலான அதிமுக நகா்மன்ற உறுப்பினா்கள் தரையில் அமா்ந்து உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
அவா்களிடம் எடப்பாடி நகராட்சி ஆணையா் சசிகலா, எடப்பாடி வட்டாட்சியா் லெனின் உள்ளிட்டோா் பேச்சுவாா்த்தை நடத்தினா். இதனை அடுத்து அவா்கள் அங்கிருந்து கலைந்து சென்றனா்.