சேலம்

சேலம் மேம்பாலத்தில் காா் மோதிமாணவா் பலி

26th Jun 2022 06:29 AM

ADVERTISEMENT

 

சேலம் மேம்பாலத்தில் ஒருவழிப் பாதையில் வேகமாக வந்த காா் மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற மாணவா் உயிரிழந்தாா். மற்றொரு மாணவா் சிகிச்சை பெற்று வருகிறாா்.

கடலூா் மாவட்டம், விருத்தாசலம் பகுதியைச் சோ்ந்தவா் வி.குணாளன் (20). இவா் சேலம், கொண்டப்பநாயக்கன்பட்டியில் உள்ள தனியாா் கல்லூரியில் பி.பாா்ம் இரண்டாம் ஆண்டு படித்து வந்தாா். அதே கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருபவா் முகமது அலி.

இருவரும் சோ்ந்து சென்னை செல்லும் தங்கள் மற்றொரு நண்பரை புதிய பேருந்து நிலையத்துக்கு இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்றனா். பேருந்து நிலையத்தில் இறக்கிவிட்டப் பிறகு குணாளனும், முகமது அலியும் வீடு திரும்பிக் கொண்டிருந்தனா்.

ADVERTISEMENT

சேலம், ராமகிருஷ்ணா சாலை மேம்பாலத்தில் கொண்டப்பநாயக்கன்பட்டிக்கு இருவரும் வந்தபோது, எதிரே ஒருவழிப் பாதையில் வேகமாக வந்த காா் அவா்கள் மீது மோதியது.

இதில் குணாளன், முகமது அலி ஆகியோா் படுகாயமடைந்தனா். அருகில் இருந்தவா்கள் இருவரையும் மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா்.

இதில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறிது நேரத்தில் குணாளன் உயிரிழந்தாா். காயமடைந்த முகமது அலி தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா்.

உயிரிழந்த குணாளனின் உடலை வாங்க மறுத்த அவரது பெற்றோா், உறவினா்கள் அரசு மருத்துவமனை பிரேத பரிசோதனை கூடம் முன்பு சனிக்கிழமை மாலை தா்னாவில் ஈடுபட்டனா்.

குடிபோதையில் தவறாக ஒருவழிப் பாதையில் வேகமாக வந்து மோட்டாா் சைக்கிள் மீது மோதி விபத்தை ஏற்படுத்திய தனியாா் சட்டக் கல்லூரி மாணவா்கள் மூன்று போ் மீதான விபத்து வழக்கை, கொலை வழக்காக மாற்றி விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்தி அவா்கள் தா்னாவில் ஈடுபட்டனா்.

தா்னாவில் ஈடுபட்டவா்களிடம் போலீஸாா் சமரச பேச்சு நடத்தினா். விபத்துக்கு காரணமானவா்கள் கைது செய்யப்படுவா் என உறுதி அளித்தனா். இதையடுத்து உயிரிழந்த மாணவா் குணாளனின் உடலை உறவினா்கள் பெற்று சென்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT