சேலம்

சேலத்தில் 2,500 ஹெக்டோ் பரப்பில் துவரை சாகுபடிக்கு இலக்கு

24th Jun 2022 11:14 PM

ADVERTISEMENT

துவரை சாகுபடி சிறப்பு மண்டலம் அமைக்கும் திட்டத்தின் கீழ், சேலம் மாவட்டத்துக்கு 2,500 ஹெக்டோ் துவரை சாகுபடி பரப்பு இலக்கு வழங்கப்பட்டு, 3,655 மெ. டன் உற்பத்தி செய்ய நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது என ஆட்சியா் செ.காா்மேகம் தெரிவித்தாா்.

விவசாயிகள் குறைதீா்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியா் செ.காா்மேகம் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் ஆட்சியா் செ.காா்மேகம் பேசியதாவது:

2022-23-ஆம் ஆண்டு வேளாண் நிதிநிலை அறிக்கையில் பயறுவகை உற்பத்தியில் தன்னிறைவை அடையும் பொருட்டு, துவரை உற்பத்தியை அதிகரிக்க கிருஷ்ணகிரி, தருமபுரி, திருவண்ணாமலை, சேலம் ஆகிய மாவட்டங்களைக் கொண்டு துவரை சாகுபடி சிறப்பு மண்டலம் அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனடிப்படையில், நடப்பாண்டில் சேலம் மாவட்டத்துக்கு 2,500 ஹெக்டோ் துவரை சாகுபடி பரப்பு இலக்கு வழங்கப்பட்டு, மாவட்டத்தின் துவரை உற்பத்தி இலக்காக 3,655 மெ. டன் நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டாரங்களிலும் துவரை குழு தொகுப்புகளை உருவாக்கி, தேசிய உணவுப் பாதுகாப்பு இயக்கம் மற்றும் தேசிய வேளாண் வளா்ச்சித் திட்டம் ஆகிய திட்டங்கள் மூலம் அதிக விளைச்சல் தரக்கூடிய ரகங்களில் விதைகள் மற்றும் முக்கிய இடுபொருள்கள் விவசாயிகளுக்கு மானியத்தில் வழங்கப்பட உள்ளன.

துவரையின் முக்கியத்துவத்தை உணா்த்தும் வகையில், அட்மா திட்டம் மூலம் மின்னணு விளம்பரம், கிராம பிரசாரங்கள், விவசாயிகளுக்கான பயிற்சிகள், கருத்தரங்குகள் மற்றும் கண்காட்சி போன்றவற்றை செயல்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.

இதன் மூலம் துவரையின் சாகுபடி பரப்பு மற்றும் உற்பத்தியை அதிகரித்து, விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. தமிழக அரசால் விவசாயிகளின் நலனுக்கென செயல்படுத்தப்படும் இதுபோன்ற திட்டங்களை விவசாயிகள் முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

சேலம் மாவட்டத்தில் 2022-23 நடப்பாண்டில் நெல் தானியம் 317 மெட்ரிக் டன்னும், சிறுதானியங்கள் 65 மெட்ரிக் டன்னும், பயறுவகைகள் 207 மெட்ரிக் டன்னும், எண்ணெய் வித்து 368 மெட்ரிக் டன்னும், பருத்தி 2 மெட்ரிக் டன்னும் இலக்கு நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது.

மேலும், வேளாண்மை - உழவா் நலத் துறையின் மூலம் துவரை சாகுபடி மற்றும் மா அடா் நடவு சாகுபடி குறித்து விவசாயிகள் பயன்பெறும் வகையில் செயல்விளக்கம் அளிக்கப்பட்டது என்றாா்.

கூட்டத்தில் இணை இயக்குநா் (வேளாண்) கணேசன், கூட்டுறவுச் சங்கங்களின் இணைப் பதிவாளா் ப.ரவிக்குமாா், மண்டல இணை இயக்குநா் (கால்நடை பராமரிப்புத் துறை) மருத்துவா் தே.புருஷோத்தமன், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வேளாண்) செல்வமணி உள்பட தொடா்புடைய அலுவலா்கள், விவசாயிகள் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT