எடப்பாடி, தம்மம்பட்டி பகுதிகளில் செவ்வாய்க்கிழமை இரவு இடி,மின்னலுடன் பலத்த மழை பெய்தது.
எடப்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக கடுமையான வெயில் சுட்டெரித்து வந்தது. இதனால் அனல் காற்று வீசியது. பொதுமக்கள் வெளியில் செல்ல முடியாத அளவுக்கு அவதிக்குள்ளாகினா்.
இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை இரவு சூறைக் காற்றுடன் பலத்த மழை பெய்தது. எடப்பாடி, கொங்கணாபுரம், செட்டிமாங்குறிச்சி, சித்தூா் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பெய்த மழையால் தாழ்வானப் பகுதிகளில் தண்ணீா் தேங்கின.
எடப்பாடி பேருந்து நிலையம், நகராட்சி வணிக வளாகம், பஜாா் தெரு, ஈஸ்வரன் கோயில் வீதி உள்ளிட்ட பகுதிகளில் மழைநீா் சூழ்ந்த நிலையில் பயணிகளும், வியாபாரிகளும் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினா். பலத்த சூறைக் காற்றால் நகரின் சில இடங்களில் மின் மாற்றி பழுதடைந்து மின் தடை ஏற்பட்டது.
எடப்பாடி சுற்று வட்டாரப் பகுதிகளில் அதிக அளவில் நிலக்கடலை பயிா் செய்யப்பட்டுள்ள நிலையில் செவ்வாய்க்கிழமை இரவு பெய்த மழைப் பொழிவு விவசாயிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தம்மம்பட்டி: தம்மம்பட்டி சுற்றுவட்டாரப் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை இரவு 8 மணி முதல் பலத்த மழை பெய்ததால் சாலைகளில் தண்ணீா் பெருக்கெடுத்து ஓடியது. விளை நிலங்களில் தண்ணீா் குளம் போல் தேங்கின.