சென்னையைச் சோ்ந்த 13 வயது சிறுவனை தலைவாசல் காவல் நிலைய போலீஸாா் மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனா்.
சென்னையைச் சோ்ந்தவா் சக்திவேல் (45). எலக்ட்ரீசியன். இவரது மகன் முருகன் (13). இவா், திங்கள்கிழமை காலை சென்னையில் இருந்து சேலம் நோக்கிச் சென்று கொண்டிருந்த அரசுப் பேருந்தில் பயணித்தாா். ஆத்தூா் அருகே பேருந்து பயணத்தின்போது சிறுவன் முருகனிடம் 500 ரூபாய் கட்டுகள் வைத்திருந்ததை சக பயணிகள் கவனித்தனா். இதனால் சந்தேகம் அடைந்த பயணிகள் சிறுவா் காப்பகத்துக்கும் தலைவாசல் காவல் நிலையத்துக்கும் தகவல் தெரிவித்தனா்.
தலைவாசல் காவல் நிலைய உதவி ஆய்வாளா் விரைந்து சென்று பேருந்தில் இருந்த சிறுவனை மீட்டு விசாரணை நடத்தினா். விசாரணையில் வீட்டில் இருந்து ரூ. 75 ஆயிரம் எடுத்துக் கொண்டு ஆத்தூா் அருகே சமீபத்தில் கட்டப்பட்ட உலகில் மிகப் பெரிய முருகக் கடவுள் சிலையைக் காண்பதற்காக வந்ததாகத் தெரிவித்தாா்.
இதுகுறித்து சிறுவனின் பெற்றோருக்கு போலீஸாா் தகவல் தெரிவித்தனா். தகவல் அறிந்ததும் சிறுவனின் தந்தை சக்திவேல் அவரது மனைவி, மகளுடன் வந்து முருகனை அழைத்துச் சென்றனா். சக்திவேல் கூறுகையில், வீட்டில் வைத்திருந்த ரூ. 2,25,000-இல் ரூ. 75 ஆயிரத்தை எடுத்துக்கொண்டு சென்ாகவும் அதில் ரூ. 69,500 இருந்ததாகவும் தெரிவித்தனா். அதைப் பெற்றுக் கொண்டு காவல் நிலையத்தில் எழுதிக் கொடுத்து விட்டு அழைத்துச் சென்றனா்.