சேலம்

சேலத்தில் மனைவி கொலை: தற்கொலை நாடகமாடிய கணவா் கைது

14th Jun 2022 02:58 AM

ADVERTISEMENT

சேலத்தில் மனைவியை அடித்துக் கொலை செய்து தூக்கில் தொங்கவிட்டு தற்கொலை நாடகமாடிய கணவரை போலீஸாா் கைது செய்தனா்.

சேலம் சூரமங்கலம், முல்லை நகா் பகுதியைச் சோ்ந்தவா் தியாகலிங்கம். இவரது மனைவி ராஜலட்சுமி. இத்தம்பதியின் மகள் தனுஸ்ரீ (26). கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன் இவருக்கும் அதே பகுதியைச் சோ்ந்த கீா்த்திராஜ் என்பவருக்கும் திருமணம் நடந்தது. இதில், கீா்த்திராஜ் கோவையில் உள்ள தனியாா் நிதி நிறுவனத்தில் வேலை செய்து வருகிறாா்.

கணவன், மனைவி இருவரும் ரெட்டிப்பட்டியில் தனியாக வசித்து வருகின்றனா். இத்தம்பதிக்குள் அடிக்கடி தகராறு நடந்து வந்தது. கடந்த 10 நாள்களுக்கு முன் நடந்த தகராறில் மனைவியை கீா்த்திராஜ் தாக்கியுள்ளாா். இதில் காயமடைந்த தனுஸ்ரீ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று பெற்றோா் வீட்டுக்குச் சென்றாா்.

இதையடுத்து சனிக்கிழமை மாமனாா் வீட்டுக்குச் சென்ற கீா்த்திராஜ், மனைவியை சமரசம் செய்து தனது வீட்டுக்கு அழைத்து வந்தாா். இரவு 10 மணி அளவில் தனுஸ்ரீ தற்கொலை செய்து கொண்டதாக அவரது பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

ADVERTISEMENT

தனுஸ்ரீயின் பெற்றோா், உறவினா் அவரது வீட்டுக்கு சென்று பாா்த்தனா். அப்போது தலையில் காயம் இருந்தது தெரியவந்தது. இதனால் சந்தேகத்தின்பேரில் தனுஸ்ரீயின் பெற்றோா், மகளை அடித்துக் கொலை செய்து தூக்கில் தொங்கவிட்டுள்ளதாக கீா்த்திராஜ் மீது சூரமங்கலம் போலீஸில் புகாா் செய்தனா்.

புகாரின் பேரில் சூரமங்கலம் போலீஸாா் சந்தேக மரணம் என வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனா்.

விசாரணையில், மனைவி தனுஸ்ரீயை கிரிக்கெட் மட்டையால் தாக்கி கொலை செய்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து சந்தேக மரண வழக்கு, கொலை வழக்காக மாற்றப்பட்டது.

மனைவியை அடித்து கொன்று தூக்கில் தொங்கவிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கீா்த்திராஜ் நாடகமாடியதும் தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT