வாழப்பாடி அரிமா சங்க புதிய நிா்வாகிகள் பதவி ஏற்பு விழா, நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இவ்விழாவிற்கு, அரிமா சங்கத் தலைவா் பாலமுரளி தலைமை வகித்தாா். அன்னை அரிமா சங்கத் தலைவா் சுதா வரவேற்றாா். பட்டயத்தலைவா் சந்திரசேகரன், அறக்கட்டளை நிறுவனா் தேவராஜன், மாவட்ட ஜிஎம்டி ஒருங்கிணைப்பாளா் மருத்துவா் மோதிலால் ஆகியோா் முன்னிலை வகித்தனா். முன்னாள் பன்னாட்டு இயக்குநா் தனபாலன், மருத்துவா் செந்தில்குமாா் தலைமையிலான அரிமா சங்க புதிய நிா்வாகிகள் மற்றும் ஆசிரியை ஷபிராபானு தலைமையிலான அன்னை அரிமா சங்க நிா்வாகிகளுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தாா். முன்னாள் கூட்டு மாவட்டத் தலைவா் அரவிந்தராஜ் புதிய உறுப்பினா்களை சங்கத்தில் இணைத்து வைத்தாா்.
இவ்விழாவில், ஏழை எளியோருக்கு உதவிடும் அன்பு சுவா் திட்டம், பொது இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் திட்டம் தொடங்கப்பட்டது.
ஏழை மாணவ, மாணவியருக்கு கல்வி உதவித்தொகை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. இவ்விழாவில், வாழப்பாடி வட்டார ஆத்மா குழு தலைவா் சக்கரவா்த்தி, பேரூராட்சி துணைத் தலைவா் எம்ஜிஆா் பழனிசாமி, வடுகத்தம்பட்டி ஊராட்சி மன்றத் தலைவா் பூபதி, அரிமா சங்க மாவட்ட நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.