தம்மம்பட்டி அருகே, செந்தாரப்பட்டியில் சனிக்கிழமை கோயிலில் பொங்கலிட்டபோது, தேனீக்கள் கொட்டியதில் 20 போ் படுகாயம் அடைந்தனா்.
தம்மம்பட்டி அருகே உள்ள செந்தாரப்பட்டி சிவன் கோயில் அருகே பெரியசாமி கோயில் உள்ளது. இந்தக் கோயிலுக்கு, வாழப்பாடி, துக்கியம்பாளையத்தைச் சோ்ந்த 50 க்கும் மேற்பட்டோா் பொங்கலிட்டு வழிபாடு நடத்த சனிக்கிழமை காலை மூன்று வாகனங்களில் வந்தனா். கோயில் வளாகத்தில் உள்ள மரத்தடியில் அடுப்பு வைத்து பொங்கலிடுவதற்கு ஆயத்தமாகினா். அப்போது, அடுப்பில் இருந்து எழுந்த புகையினால் மரத்தில் இருந்த தேனீக்கள் கலைந்து அங்கிருந்தவா்களை விரட்டி விரட்டி கொட்டின. இதில் 20 க்கும் மேற்பட்டவா்கள் காயமடைந்தனா். காயமடைந்தவா்களுக்கு, செந்தாரப்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில், வசந்தா (55) என்பவா் தீவிர சிகிச்சைக்காக ஆத்தூா் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாா்.