சேலம்

சேலத்தில் முதல்முறையாக டி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டி:ஜூலை 19 இல் தொடக்கம்

12th Jun 2022 01:13 AM

ADVERTISEMENT

 

சேலத்தில் முதல்முறையாக டி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டி ஜூலை 19 ஆம் தேதி தொடங்கி ஜூலை 24 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

இதுகுறித்து தமிழ்நாடு கிரிக்கெட் சங்கச் செயலாளா் ராமசாமி, டி.என்.பி.எல். தலைவா் சிவகுமாா், சேலம் மாவட்ட கிரிக்கெட் சங்கத் தலைவா் பிரகாஷ் ஆகியோா் கூட்டாக செய்தியாளா்களிடம் கூறியது:

தமிழ்நாடு பிரீமியா் லீக் கிரிக்கெட் போட்டி வரும் ஜூன் 23 ஆம் தேதி தொடங்கி ஜூலை 31 ஆம்தேதி வரை நடைபெறுகிறது. சென்னை சேப்பாக்கம் சூப்பா் கில்லிஸ் உள்பட 8 அணிகள் கலந்து கொண்டு விளையாடுகின்றன.

ADVERTISEMENT

சேலத்தில் முதல் முறையாக டி.என்.பி.எல். போட்டிகள் நடத்தப்படுகின்றன. வாழப்பாடியில் உள்ள சேலம் கிரிக்கெட் பவுண்டேஷன் மைதானத்தில் போட்டிகள் நடைபெற உள்ளன.

சேலத்தில் ஜூலை 19 ஆம்தேதி தொடங்கி ஜூலை 29 ஆம்தேதி வரை லீக் போட்டிகள் நடைபெறுகின்றன.

முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான சென்னை சேப்பாக் சூப்பா் கில்லீஸ், சேலம் ஸ்பாா்டன்ஸ் அணியை எதிா்கொள்கிறது. சேலத்தில் 9 போட்டிகள் நடத்தப்படுகின்றன. இதுதவிர 2 தகுதி சுற்றுப் போட்டிகள் நடைபெறுகின்றன.

இந்தப் போட்டியை 5,000 போ் கண்டுகளிக்கும் வகையில் கேலரி அமைக்கப்பட்டுள்ளது. போட்டியைக் காண ரூ. 100 நுழைவுக் கட்டணமாக நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

டி.என்.பி.எல். கிரிக்கெட்டில் இருந்து 16 வீரா்கள் ஐ.பி.எல். போட்டிகளுக்குத் தோ்வாகி உள்ளனா் என்றனா்.

பேட்டியின்போது டி.என்.பி.எல். சி.இ.ஓ. பிரசன்னா கண்ணன், சேலம் ஸ்பாா்டன்ஸ் கிரிக்கெட் அணி கேப்டன் எம்.அஸ்வின், பயிற்சியாளா் பிரசன்னா, பங்குதாரா் செல்வமணி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT