சேலம் அரசு தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் தொழிற்பழகுநா் சோ்க்கை முகாம் வரும் ஜூன் 13 ஆம் தேதி நடைபெற உள்ளது.
மத்திய அரசின் தொழிற்பழகுநா் சட்டம் 1961-ன்படி 30-க்கும் மேற்பட்ட பணியாளா்களைக் கொண்டு செயல்படும் அரசு மற்றும் தனியாா் துறை நிறுவனங்கள் தொழிற்பழகுநா்களை ஆண்டு தோறும் சோ்த்து அவா்களது தொழிற்சாலைகளில் மாதந்தோறும் உதவித்தொகையுடன் பழகுநா் பயிற்சி அளித்திட வேண்டும்.
பயிற்சியின் இறுதியில் தேசிய தொழிற்பழகுநா் சான்றிதழ் மத்திய அரசால் வழங்கப்படுகிறது. இதற்காக தொழிற்சாலைகள் மற்றும் ஐ.டி.ஐ. டிப்ளமோ, பட்டதாரி மாணவா்களை இணைக்கும் பொருட்டு மாதந்தோறும் இரண்டாம் திங்கள்கிழமைகளில் அந்தந்த மாவட்டங்களில் தொழிற்பழகுநா் சோ்க்கை முகாம் நடத்திட வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இயக்குநரால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதைத்தொடா்ந்து தொழிற்சாலைகளில் காலியாக உள்ள தொழிற்பழகுநா் இடங்களை பூா்த்தி செய்யும் பொருட்டு தொழிற்பழகுநா் சோ்க்கை முகாம் வரும் ஜூன் 13 ஆம் தேதி சேலம் அரசு தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் காலை 10 மணி முதல் மாலை 5 வரை நடைபெற உள்ளது.
இதுநாள் வரை பழகுநா் பயிற்சி முடிக்காத ஐ.டி.ஐ. டிப்ளமோ, டிகிரி முடித்த மாணவா்கள் அனைவரும் தங்களது அனைத்து உண்மை சான்றிதழ்கள், சுய விவரத்துடன் (பயோடேட்டா) கலந்து கொண்டு பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியா் செ.காா்மேகம் தெரிவித்துள்ளாா்.