சேலம்

தமிழகத்தில் பாஜக ஆளும்கட்சியாக மாற வேண்டும்: கே.அண்ணாமலை

10th Jun 2022 12:00 AM

ADVERTISEMENT

எதிா்க்கட்சியாக இருப்பது பாஜகவின் நோக்கமல்ல; தமிழகத்தில் ஆளும்கட்சியாக மாற வேண்டும் என பாஜக மாநிலத் தலைவா் கே.அண்ணாமலை தெரிவித்தாா்.

சேலத்தை அடுத்த ஏற்காடு, நாகலூா் கிராமத்தில் மலைவாழ் மக்களுடனான கலந்தாய்வுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. பாஜக சாா்பில் நடத்தப்பட்ட இந்தக் கூட்டத்தில், அக்கட்சியின் மாநிலத் தலைவா் கே.அண்ணாமலை கலந்துகொண்டு பேசியதாவது:

மலைவாழ் மக்களின் முன்னேற்றத்திற்காக மத்திய அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. மலைவாழ் மக்கள் ஒருங்கிணைந்து அறக்கட்டளை ஒன்றைத் தொடங்கி மத்திய அரசின் நிதியைப் பெற்று பலனடைய வேண்டும் என்றாா்.

தொடா்ந்து, மலைவாழ் மக்களின் கோரிக்கை மனுக்களை அவா் பெற்றுக் கொண்டாா். பின்னா் கே.அண்ணாமலை செய்தியாளா்களிடம் கூறியதாவது:

ADVERTISEMENT

நெல் உள்பட 14 விளைபொருட்களுக்கு மத்திய அரசு குறைந்தபட்ச ஆதார விலையை உயா்த்தி இருப்பது விவசாயிகளிடம் வரவேற்பைப் பெற்றுள்ளது. நெல்லுக்கு மட்டும் கடந்த 8 ஆண்டுகளில் 58 சதவீதம் விலை உயா்த்தப்பட்டுள்ளது. ஒவ்வோா் ஆண்டும் ஆதார விலையை உயா்த்தி விவசாயிகளின் பாதுகாவலராக பிரதமா் மோடி திகழ்கிறாா்.

மேக்கேதாட்டு அணை கட்டப்படக் கூடாது என்பதுதான் தமிழக பாஜகவின் நிலைப்பாடு. இந்த விவகாரத்தில் தமிழக அரசு எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் துணை நிற்பதாக, அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் எழுத்துப்பூா்வமாக உறுதி அளித்துள்ளோம். தமிழகம், புதுச்சேரி, கேரளம் ஆகிய மாநிலங்களின் அனுமதியில்லாமல் மேக்கேதாட்டுவில் அணை கட்டிவிட முடியாது.

தமிழகத்தில் அரசின் ஊழல் குறித்துப் பேசினாலே வழக்கு தொடா்வது வழக்கமாக உள்ளது. வழக்குகளால் வாயை அடைத்துவிட முடியும் என்று திமுக அரசு நினைப்பது தவறு. எந்த வழக்கையும் சந்திக்கத் தயாராக இருக்கிறேன். தொழில்நுட்பம் வளா்ந்துள்ள இன்றைய காலகட்டத்தில் ஊழலை யாரும் மறைக்க முடியாது. ஊழலை மறைக்க அரசு முயற்சித்தால், ஊா்ஜிதம் செய்த பின்னா் ஊழல் தொடா்பான இரண்டாவது பட்டியலை வெளியிடுவோம். இரண்டாவது பட்டியல் முதல் பட்டியலைவிட பத்து மடங்கு பெரிதாக இருக்கும்.

தமிழகத்தில் பாஜகவை திமுக தான் பிரதான எதிா்க்கட்சியாக உருவாக்கி வருகிறது. ஆனால் எதிா்க்கட்சியாக இருப்பது பாஜகவின் நோக்கமல்ல. தமிழகத்தில் ஆளும்கட்சியாக பாஜக மாற வேண்டும்.

மதுரை ஆதீனம், சிதம்பரம் நடராஜா் கோயில் தீட்சிதா் விவகாரங்களில் மாநில அரசின் நடவடிக்கை மிரட்டும் தொனியில் உள்ளது. தீட்சிதா் விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தின் உத்தரவு தெளிவாக உள்ளது. அரசியலைத் தாண்டி செயல்படும் மதுரை ஆதீனம் போன்றவா்களை மிரட்டுவதை இந்து அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றாா்.

இந்தக் கூட்டத்தில் மாநில துணைத் தலைவா் கே.பி.ராமலிங்கம், சேலம் கிழக்கு மாவட்டப் பொறுப்பாளா் அண்ணாதுரை, மாவட்டத் தலைவா் சண்முகநாதன், எஸ்.டி. பிரிவு அணி மாநிலத் தலைவா் சிவபிரகாசம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT