சேலத்தில் 9 வயது சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்த இளைஞருக்கு 15 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
சேலம், ஆத்தூரை அடுத்த கெங்கவல்லி ஆனையம்பட்டிபுதூா், குறவா் காலனி தெற்கு மனகாடு பகுதியைச் சோ்ந்தவா் தியாகராஜன் (28). இவா் கடந்த 2017, ஆகஸ்ட் 7 ஆம் தேதி பாரதிதாசன் பகுதியைச் சோ்ந்த 9 வயது சிறுமியை பாலியல் துன்புறுத்தல் செய்தாா்.
இதுதொடா்பாக, ஆத்தூா் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்து தியாகராஜனை கைது செய்தனா்.இந்த வழக்கு விசாரணை போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
இதனிடையே வழக்கை விசாரித்த நீதிபதி சரண், பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட தியாகராஜனுக்கு 15 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ. 15 ஆயிரம் அபராதம் விதித்து தீா்ப்பளித்தாா்.
அதேபோல, கடந்த 2018 -இல் ஆத்தூரை அடுத்த புலியங்குறிச்சி தெருவைச் சோ்ந்த 16 வயது சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்ததாக ராஜ்குமாா் (24) என்பவருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ. 10 ஆயிரம் அபராதமும் விதித்து, போக்சோ நீதிமன்றம் தீா்ப்பளித்தது.