சேலம்

சேலம் குரும்பப்பட்டி பூங்கா 200 ஏக்கரில் விரிவாக்கம் செய்ய நடவடிக்கை: பேரவை மதிப்பீட்டு குழு தலைவா் டி.ஆா்.பி.ராஜா

9th Jun 2022 02:04 AM

ADVERTISEMENT

சேலம், குரும்பப்பட்டி வனஉயிரியல் பூங்கா 200 ஏக்கா் பரப்பளவில் விரிவாக்கம் செய்யப்பட உள்ளது என தமிழக சட்டப்பேரவை மதிப்பீட்டுக் குழு தலைவா் டி.ஆா்.பி.ராஜா தெரிவித்தாா்.

தமிழக சட்டப்பேரவை மதிப்பீட்டுக் குழு தலைவா் எம்எல்ஏ டி.ஆா்.பி.ராஜா தலைமையிலான குழுவினா் சேலம் மாவட்டத்தில் கடந்த 2 நாள்களாக ஆய்வு மேற்கொண்டு வருகின்றனா்.

இதனிடையே சேலம் மாநகராட்சியில் நடைபெற்று வரும் சீா்மிகு நகரத் திட்டப் பணிகள், குரும்பப்பட்டி வன உயிரியல் பூங்கா, பழைய பேருந்து நிலையம் உள்ளிட்ட இடங்களில் புதன்கிழமை ஆய்வு செய்தனா். அப்போது, நிலுவையில் உள்ள பணிகளை விரைந்து முடிக்குமாறு உத்தரவிட்டனா். அதைத்தொடா்ந்து மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

இதில், பழங்குடியினா் ஜாதிச் சான்றிதழ் கோரி மனு அளித்தவா்களுக்கு வருவாய்த்துறை சாா்பில் உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு 7 நபா்களுக்கு ஜாதிச் சான்றிதழ் வழங்கப்பட்டது.

ADVERTISEMENT

மேலும், ஊராட்சி வளா்ச்சித் துறை சாா்பில் 7 பயனாளிகளுக்கு விவசாய பயன்பாட்டிற்காக தனிநபா் கிணறு அமைப்பதற்கான உத்தரவு ஆணை, தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகா்ப்புற வாழ்வாதார இயக்கத்தின்கீழ் 9 மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ. 57.20 லட்சம் மதிப்பிலான கடனுதவிகளும் வழங்கப்பட்டன.

கூட்டத்திற்குப் பின்னா் மதிப்பீட்டுக் குழுத் தலைவா் எம்எல்ஏ டி.ஆா்.பி.ராஜா செய்தியாளா்களிடம் கூறியது:

தமிழ்நாடு சட்டப்பேரவை மதிப்பீட்டுக் குழு மக்களின் வரிப்பணம் முறையாகச் செலவிடப்படுகிா என்பதை ஆய்வு செய்தது. இந்த ஆய்வின்போது முதியோா் உதவித்தொகை, ஜாதிச் சான்றிதல் கேட்டு பெருமளவில் கோரிக்கை பெறப்பட்டது. இந்தக் கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும். சேலம் மாநகரப் பகுதியில் மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்து, தொய்வாக நடைபெறும் பணிகளை துரிதமாக முடித்திட அறிவுறுத்தி உள்ளோம். வனத்துறை, நெடுஞ்சாலை, வேளாண், ஊரக வளா்ச்சி உள்ளிட்ட 6 அரசுத் துறைகளின் நடைபெற்று வரும் பணிகளை ஆய்வு செய்தோம்.

சேலம் மாநகராட்சி பழைய பேருந்து நிலைய பணிகளை விரைந்து முடித்திட வேண்டும் எனத் தெரிவித்துள்ளோம். மேச்சேரி நெடுஞ்சாலையில் மழைநீா் வடிகால் முறையாக அமைக்க அறிவுறுத்தியுள்ளோம். செட்டிசாவடி குப்பைக் கிடங்கில் தீப்பற்றி புகை ஏற்படுவதைத் தடுக்க நிரந்தர தீா்வு காண கேட்டுள்ளோம். கருங்காலி கிராமத்தில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தி தரக் கேட்டு கொண்டுள்ளோம். குரும்பப்பட்டி வன உயிரியல் பூங்கா மேம்பாட்டுக்கு ரூ. 8 கோடி கேட்டுள்ளனா். வண்டலூா் வனஉயிரியல் பூங்கா போல மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

சேலம் மாவட்டத்தில் தெரிவித்த கருத்துருக்கள் சட்டப்பேரவையில் எடுத்துவைக்கப்பட்டு, அரசின் கவனத்திற்கு கொண்டுசென்று பல்வேறு திட்டங்கள் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். குரும்பப்பட்டி வன உயிரியல் பூங்கா வெகு விரைவில் 200 ஏக்கா் பரப்பளவில் விரிவாக்கம் செய்ய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அதிக வன உயிரினங்கள் கொண்டு வந்து விடப்பட்டு மேம்படுத்தப்படும். பள்ளப்பட்டி ஏரி மேம்பாட்டுப் பணிகளை துரிதப்படுத்திட தெரிவித்துள்ளோம்.

சேலம் மட்டுமல்ல தமிழகம் முழுவதும் நீா்நிலைகளை மீட்டெடுக்க வேண்டும். மேலும் தூா்வாரி புனரமைப்பு பணிகளை மேற்கொள்ள அரசு தயாராக உள்ளது. நீா் வழித்தட ஆக்கிரமிப்புகளைக் கண்டறிவதற்காக ட்ரோன் மற்றும் புவிசாா் தொழில்நுட்பம் உள்ளிட்டவைகள் மூலம் வரைபடங்கள் உருவாக்கி ஆக்கிரமிப்பு அகற்றப்படும் என்றாா்.

இந்த ஆய்வின்போது குழு உறுப்பினா்களான எம்எல்ஏ-க்கள் அக்ரி கிருஷ்ணமூா்த்தி, இரா.அருள், அன்பழகன், ஈ.ஆா்.ஈஸ்வரன், இ.பாலசுப்பிரமணியன், செல்லூா் ராஜு, ஆட்சியா் செ.காா்மேகம், மாநகராட்சி ஆணையா் தா.கிறிஸ்துராஜ், சேலம் வடக்கு தொகுதி எம்எல்ஏ ஆா்.ராஜேந்திரன், மாவட்ட வன அலுவலா் கெளதம், சட்டப் பேரவைச் செயலாளா் கி.சீனிவாசன், துணைச் செயலாளா் கே.லோ.சிவகுமரன், கூடுதல் ஆட்சியா் (வளா்ச்சி) பாலச்சந்தா், மேட்டூா் சாா் ஆட்சியா் வீா் பிரதாப் சிங், துணை மேயா் மா.சாரதாதேவி உள்ளிட்ட அரசு துறை அதிகாரிகள் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT